பக்கம் எண் :

647

வன்பரணர்:- பரணர், நெடுங்கழுத்துப் பரணரென வேறு இரு புலவர் உளராதலின், இவர் பெயர்க்குமுன் வன்மையென்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது. இவருடைய செய்யுளிலுள்ள பொருள் நயம் சிறந்தது. இவராற் பாடப்பட்டோர்; கண்டீரக்கோப்பெருநள்ளி, வல்விலோரி யென்பார். நள்ளியை நோக்கி, ‘நீ முற்ற அளித்ததால், இனி எம்முடைய நா ஏனை அரசரைத் துதித்தலை யறியாது’ என்பர்: “பரிசின் முற்றளிப்பப், பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச், செய்யா கூறிக் கிளத்தல், எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே” (148) . பெருஞ் செல்வத்தை அடைந்தமையால், எம்மவர் ஆடல்பாடல்களை அடியோடேமறந்தனரென்பதைப் புலப்படுத்தி, “மாலை மருதம் பண்ணிக் காலைக், கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி, வரவெமர் மறந்தன ரதுநீ, புரவுக் கடன் பூண்ட வண்மையானே” (149) எனவும்,” பசியா ராகன் மாறு கொல் விசிபிணிக், கூடுகொ ளின்னியங் கறங்க, ஆடலு மொல்லார்தம் பாடலுமறந்தே” (153) எனவும் கூறுவர்; நள்ளி தன்னை இன்னா னென்று புலப்படுத்தாமல் உணவு முதலியவற்றை அன்புடனளித்துச் சென்ற அருமையைக் கூறிய 150-ஆம் செய்யுள் அறிஞரும் கொடையாளிகளும் எப்பொழுதும் படித்துக் கைக்கொண்டொழுகற்பாலது. வல்விலோரியின் வில்வன்மையைப் புலப்படுத்தற்கு, “வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி, பேழ்வா யுழுவையைப் பெரும்பிறி துறீஇப், புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி யுரற்றலைக், கேழற் பன்றி வீழ வயல, தாழற் புற்றத் துடும்பிற் செற்றும், வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்” (152) என இவர் கூறிய அருமை நுணுகி அறிதற்பாலது. இவர் செய்ததாக நற்றிணையில் ஒரு செய்யுள் காணப்படுகின்றது.

வான்மீகியார்:- ஒரு முனிவர் பெயராகிய இப்பெயர் மரபு பற்றி இவருக்கு இடப்பட்டது போலும். இவர் கூறிய துறவறத்தின் பெருமை அறிதற்பாலது; “வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக், கையவியனைத்து மாற்றாது” என்பதனால் அறிக. இவர் பெயர் வான்மீகையாரெனவும் வழங்கும். முதற் சங்கத்திருந்த புலவருள் வான்மீகனாரென்று ஒருவருளர்; அவர் வேறு; இவர் வேறு.

விரிச்சியூர் நன்னாகனார்:- தம்முடைய தலைவன் போர்செய்தற்குத் தம்மினும் முந்திச் செல்லுதலை விளக்கிக் கூறியிருத்தலின், இவர் ஒரு வீரராக எண்ணப்படுகிறார்; அன்றி ஒரு வீரன் கூற்றைக் கொண்டு கூறியதுமாம்.

விரியூர் நக்கனார்:- சிவபிரானுடைய திருநாமமாகிய நக்கனாரென்பது இவருக்கு இடப்பட்டதுபோலும். இப்பெயர் விரியூக நக்கனாரெனவும் விரியூரங்கனெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவர் தம்முடைய தலைவனது வேற்படையைப் பலபடப் பாராட்டிக் கூறியிருக்கின்றனர்.

வீரை வெளியனார்:- வீரைவெளியென்பது ஓரூர். இவர், “முன்றின் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப், பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நிழல்” என்று தம்முடைய தலைவனது வீட்டு முன்றிலையும், “வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கென்றும், அருகா தீயும் வண்மை, உரைசா னெடுந்தகை” என்று அவன் கொடைவிசேடத்தையும் கூறுவர்.