பக்கம் எண் :

648

வெண்ணிக் குயத்தியார்:- வெண்ணியென்பது ஓரூர் ; குயத்தி-குயச்சாதியிற் பிறந்த மாது, இவராற் பாடப்பட்டோன் சோழன் கரிகாற் பெருவளவன். இப்பெயர் வெண்ணிற் குயத்தியாரெனவும் காணப்படுகின்றது.

வெள்ளெருக்கிலையார்:- இவராற் பாடப்பட்டோன் வேள் எவ்வி. அவனிறந்த பின்பும் இவரிருந்து புலம்பினர். இறந்த அவனுக்கு அவன் மனைவி சிறிய இடத்திற் பிண்டம் வைத்தலைக் கண்டு கூறுதல் வாயிலாக, அவன் பெருங்கொடையைப் புலப்படுத்தினர்.

வெள்ளைக்குடி நாகனார்:- வெள்ளைக்குடி யென்பது ஓரூர். இவர் தம்முடைய பழைய நிலங்களுக்குரிய வரிப்பணத்தைச் செலுத்துதற்கு ஆற்றாதவராகிச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்குச் செவியறிவுறுத்தி அச்செய்களை 1முற்றூட்டாகப் பெற்றனர். இன்னும் இவர்வாக்காக நற்றிணையில் இரண்டு பாடல்கள் உள்ளன.
வெள்ளைமாளர்:- இவர் பாடிய ஏறாண்முல்லைத்துறை மிக்க பொருள் நயமுடையது.

வெறிபாடிய காமக்கண்ணியார்:- இவர் பெண்பாலார். காமக் கண்ணி (காமாக்ஷி) யென்பது காஞ்சிநகரத்திற் கோயில்கொண்டெழுந் தருளிய அம்பிகையின் திருநாமம். வெறியென்பது தெய்வமேறப்பெற்று ஒருத்தியாடுதல். இது வெறியாட்டமெனவும் வழங்கும்; இதன் இயல்பை நன்றாக விளக்கிப் பாடியிருத்தலால், ‘வெறிபாடிய’ என்னும் அடைமொழி இவர் பெயர்க்குமுன் சேர்க்கப்பெற்றது; அகநா. 22, 92; நற். 268. இவர் பெயர் வெறியாடிய காமக்கண்ணியாரெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவர் இந்நூலிற் பாடிய செருவிடைவீழ்தல், குதிரைமறமென்னுந் துறைப்பாடல்கள் அறிதற்பாலன.

வேம்பற்றூர்க் குமரனார்:- வேம்பற்றூரென்பது மதுரைக்குக் கிழக்கேயுள்ள தோரூர்; வேம்பத்தூரென இக்காலத்து வழங்கும்; குலசேகரசதுர்வேதிமங்கல மென்றும் இதனுக்கு ஒரு பெயருண்டென்று சிலாசாசனத்தால் தெரிகிறது. கடைச்சங்கப் புலவர் காலந் தொடங்கி இன்றுவரை அந்தணர்களே தமிழ்ப்புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தல் கண்கூடாதலாலும், பெயராலும் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்.

ஆசிரியர் பெயரில்லாத பாட்டுக்கள்:- 244, 256-7, 263, 267-8, 297, 307, 323, 327-8, 333, 339-40, 355, 361.


1. முற்றூட்டு - ஸர்வமானியம்