பக்கம் எண் :

650

இவன் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையால் வெல்லப்பட்டானென்று பதிற்றுப்பத்துள் எட்டாம்பத்தினால் விளங்குகின்றது. ‘ஒருவன்மேற் சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழஞையின் அடங்கும் ; அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமானிருந்ததாம்‘ (தொல் புறத்திணை. சூ. 7, ந.) என்றதனால் இவனுடைய வரலாற்றின் ஒரு பகுதி அறியப்படுகின்றது. இவனைப் பாடியவர்கள்; ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார்.

அதியமான் நெடுமாஞ்சிமகன் பொகுட்டெழினி:- இவன் கொடையும் இன்பச்சிறப்பும் வென்றிச்சிறப்புமுடையோன்: இவன் பெயர் அதியமான் மகன் பொகுட்டெழினி எனவும் வழங்கும்; இவனைப் பாடியவர் ஒளவையார்.

அந்துவஞ்சாத்தன்:- இப்பெயர்க்கு அந்துவன் மகனாகிய சாத்தனெனப் பொருள் கொள்க. இவன் ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனுடைய நண்பருள் ஒருவன்; “உரைசா லந்துவஞ் சாத்தனும்” (71)

அந்துவன்கீரன்:- இதற்கு அந்துவன் மகனாகிய கீரனென்பது பொருள். இவனுக்கு கொடையைச் செவியறிவுறுத்திப் பாடிய புலவர் காவட்டனார்.

அம்பர்கிழாஅன் அருவந்தை:- இவனைப் பாடிய புலவர் கல்லாடனார்; 385-ஆம் செய்யுளின் 9 - 10-ஆம் அடிகளின் குறிப்பாற் பிற வரலாறுகளை உணர்க.

அவியன்:- ஓருபகாரி; இவனைப் பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்.

ஆதனழிசி:- ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனுடைய நண்பருள் ஒருவன்.

ஆதனுங்கன்:- இவன் கொடையாளிகளுள் ஒருவன்; வேங்கட மலையின் தலைவன்; இவனைப்பாடிய புலவர் கள்ளில் ஆத்திரையனார். இவன் அருமைபெருமையை இப்புலவர் பாடிய பாடல்கள் புலப்படுத்தும்.

ஆந்தை:- இவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனுடைய நண்பருள் ஒருவன்; இவனுடைய ஊர் எயிலென்பது; “மன்னெயிலாந்தையும்” (71)

ஆமூர்மல்லன்: - முக்காவனாட்டு ஆமூர்மல்லனென்னும் பெயரைப் பார்க்க.

ஆய்:- இருவகைவேளாளரில் இவன் உழுவித்துண்போர் வகையினன்; அரசராற் கொடுக்கப்படும் வேளென்னும் உரிமையடைந்தோன்; கடையெழு வள்ளல்களில் ஒருவன்; சிறந்த வீரன்; பொதியின் மலைத்தலைவன்; அதனருகேயுள்ள ஆய்குடி என்பது இவனுடைய ஊர்; ஆய் அண்டிரனென்றும், அண்டிரனென்றும் இவன் பெயர் வழங்கும்; பாணர்க்கும் இரவலர்க்கும் யானைகளையும் பிறவற்றையும் மிகுதியாகக் கொடுத்தோன்; சுரபுன்னைப்பூ மாலையை உடையவன்; கொங்கு நாட்டாரோடு போர்செய்து