பக்கம் எண் :

651

அவர்களைப் புறங்காட்டியோடச் செய்தோன்; யாதொரு பயனையுங் கருதாது இரவலர்க்குக் கொடுத்து மகிழ்வித்தலையே கடனாகவுடையோன்; இவனுடைய நற்குண நற்செய்கைகள் யாவும் மனமுருகப் புலவர்கள் இவனைப் பாடிய பாட்டுகளால் (127 - 36, 240 - 41. 375 - 5) நன்கு புலப்படும்; இன்னும,் பாம்பு பெற்றுக்கொடுத்த நீலஉடையினை ஆலின் கீழெழுந்தருளிய தலைவனுக்கு (பரமசிவனுக்கு) இவன் கொடுத்தனன்; இதனை, “நீல நாக நல்கிய கலிங்கம், ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த, சாவந்தாங்கிய சாந்துபுலர் திணிதோள், ஆர்வ நன்மொழி யாயும்” (96 - 9) என்னும் சிறுபாணாற்றுப்படையால் உணர்க. இவனைப் பாடிய புலவர்கள்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார். இவர்களுள் இவன் இறந்தபின்பும் இருந்தோர்: துறையூர் ஓடைகிழாரொழிந்த மற்றையோர்.

இயக்கன்:- இவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனுடைய நண்பருள் ஒருவன்.

இருங்கோவேள்: - இவன் கொடையாளிகளுள் ஒருவன்; வடபக்கத்தில் ஒரு முனிவருடைய ஓமகுண்டத்திலே தோன்றித் துவராபதியை (துவாரசமுத்திரத்தை) ஆண்டு நாற்பத்தொன்பது தலைமுறை தொன்று தொட்டுவந்த வேளிர்களுள் ஒருவன்; ஒரு பெரியோர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவருக்கு இடையூறு செய்யவந்த புலியொன்றை அவர் கட்டளையின்படி கொன்றமையால் இவனுக்குப் புலிகடிமாலென்று ஒரு பெயர் உண்டாயிற்றென்பர்; இவற்றை, “நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச், செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை, உவரா வீகைத் துவரை யாண்டு, நாற்பத் தொன்பது வழிமுறை வந்த, வேளிருள் வேளே”, “ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்” என்பவற்றாலுணர்க. வேள்பாரி இறந்த பின்பு அவன் புதல்வியரை அழைத்து வந்து மணஞ்செய்து கொள்ளும்படி கபிலர் புகழ்ந்துவேண்ட, அதற்கு உடம்படாது மறுத்தமையால் இவன் அவரால் வெறுக்கப்பட்டான்.

இளங்கண்டீரக் கோ:- இவன் கண்டீரக்கோவின் தம்பி; இவனும் இளவிச்சிக்கோவும் ஒருங்கிருந்தபொழுது அங்கு வந்த பெருந்தலைச் சாத்தனார் இவனை மட்டும் தழுவ, அவன் இவ்வாறு செய்தது என்னையென, அவர் இவன் மேம்பாட்டைப் புகழ்ந்தும் அவனை அவமதித்தும் பாடினார்.

இளங்குமணன்:- இவன் குமணன் தம்பி்; இவன் தன் தமையனும் சிறந்த கொடையாளியுமாகிய குமணன்பாற் பகைமையுற்று அவன் நாட்டைக் கைக்கொண்டு, காட்டிற் புகுந்து ஒளித்திருந்த அவனைக் கொல்ல நினைத்து பின்பு பெருந்தலைச்சாத்தனாரால் அப்பகைமை ஒழிந்து வாழ்ந்தான்.

இளந்தத்தன்:- இவன் ஒரு புலவன்; சோழன் நலங்கிள்ளியிடத்திருந்து உறையூர் புகுந்தபொழுது, ஒற்றுவந்தானென்று காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியால் எண்ணப்பட்டு அவன் கொல்லப்புகுந்த விடத்துக் கோவூர் கிழாராற் பாடி விடுவிக்கபபட்டான்.