இளவிச்சிக்கோ:- இவன் விச்சிக்கோவின் தம்பி; இவனைப் பற்றிய வரலாற்றை, ‘இளங்கண்டீரக்கோ’ என்பதிற் காண்க. இவன் பெயர் இளவச்சிரக்கோவெனவும் வழங்கும்; இவன்காலத்துப் புலவர் பெருந்தலைச்சாத்தனார். இளவெளிமான்:- இவன் வெளிமானுடைய தம்பி; உலோபகுண முடையவன்; கல்விமான்கள்பால் அன்பில்லாதவன். வெளிமானிறந்த பின்பு பெருஞ்சித்திரனார் வந்து, ‘பரிசில்கொடு’ என்று கேட்ப, சிறிது கொடுத்தமையின் அவரால் அவமதித்துப் பாடப்பெற்றான்; இவன் காலத்துப்புலவர் பெருஞ்சித்திரனார். ஈர்ந்தூர்கிழான் தோயன்மாறன்:- இவன் சிறிது செல்வமுடைய வனாயினும் பரசிலர்க்கு இல்லையென்னாது கொடுப்போன்; தன் அரசனுக்கு வந்த துன்பங்களைத் தாங்கிப் பகைவரை வெல்லும் வீரமுடையோன்; இவனைப் பாடிய புலவர்; கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்; ஈரந்தூர்கிழான் கோயமானெனவும் பிரதிபேதமுண்டு. எயினன்:- ஓருபகாரி; இவனது ஊர் வாகையென்பது, இவனைப் பாராட்டிய புலவர் மதுரைப் படை மங்க மன்னியார். எவ்வி:- வேளெவ்வியென்னும் பெயரைப் பார்க்க. எமினி:- இவன் கடையெழுவள்ளல்களில் ஒருவன்; கூவிளங் கண்ணியையுடையோன்; குதிரைமலை இவனுடையது. ஏறைக்கோன்:- இவன் குறவர்கள் தலைவன்; காந்தப்பூமாலையை அணிவோன்; மலைநாட்டை ஆள்வோன்; நற்குணநற்செய்கையை உடையவன்; இவனைப் பாடியவர் குறமகள் இளவெயினியென்பார். ஏனாதி திருக்கிள்ளி:- இவன் கொடையும் வீரமுமுடையோன்; இவனைப் பாடிய புலவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்; ஏனாதியென்பது அரசனாற், கொடுக்கப்படும் பட்டப்பெயர்; தொல்காப்பியப் புறத்திணையியல் 8-ஆம் சூத்திர (ந.) உரையிற் காண்க. ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன்:- இவன் வீரர்க்கும் பாணர்க்கும் விறலியர்க்கும் பேருதவி புரிந்தோன்; வலியவீரன்; இவன் இறந்த பின்பு பிரிவாற்றாது பாடிய புலவர்: குடவாயிற்கீரத்தனார், தொடித்தலை விழுத்தண்டினார். இவன்பெயர் சாத்தனெனவும் வழங்கும். ஓய்மான் நல்லியக்கோடன்:- இவன், ஓய்மானாட்டு நல்லியக் கோடனெனவும் வழங்கப்படுவன். இவன் ஒரு சிற்றரசன்; சிறுபாணாற்றுப்படைத் தலைவன்; இவன்காலத்தில் இவனைப்போன்ற பெருங்கொடையாளிகள் யாரும் இலரென்று தெரிகின்றது. பேகன் முதலிய ஏழுவள்ளல்களுக்கும் இவன் காலத்தாற் பிந்தியவன்; இவை, அப்பாட்டிலுள்ள, “வஞ்சியும் வறிதே”,
|