பக்கம் எண் :

653

“மதுரையும் வறிதே”, “உறந்தையும் வறிதே” என்பவற்றாலும் அதன் 84-ஆம் அடி முதலியவற்றாலும் விளங்கும். இவன் பரம்பரையில் ஓய்மான் நல்லியாதன், ஓய்மான்வில்லையாதனென்ற இரண்டு உபகாரிகள் இருந்து விளங்கினார்களென்று இந்நூலால் தெரிகின்றது. இவனைப் பாடிய நல்லிசைப் புலவர்கள்; நல்லூர் நத்தத்தனாரும், புறத்திணைநன்னாகனாருமாவார். கிடங்கிலென்னும் ஊரும் திருத்திண்டீசுவரமும் (திண்டிவனமும்) , ஓய்மானாட்டில் உள்ளனவென்று தென்னிந்திய சிலாசாசனத்தின் 3-ஆம் தொகுதி, 2-ஆம் பகுதி, 201-ஆம் பக்கத்திலுள்ள சாசனத்தால் தெரிகின்றது; கிடங்கில் (சிறுபாண். 160) என்பது திண்டிவனத்தைச் சார்ந்த ஊர்களுளொன்று; இக்காலத்துக் கிடங்காலென வழங்கும்; யாப்பருங்கலவிருத்தியின் மேற் கோளாகிய “கிடங்கிற் கிடங்கில்” என்னும் வெண்பாவில் வந்துள்ள கிடங்கிலென்னு மூர் இதுவே. இவ்வூரிற் சிதைந்த அகழியும் இடிந்த கோட்டையும் இன்றும் காணப்படுகின்றன. இவனுடைய ஊர்களுள் ஒன்றாகிய மாவிலங்கை (176) புனனாட்டுக்கு வடக்குள்ள அருவாநாடு, அருவாவடதலை நாடென்ற இரண்டும் சேர்ந்த இடமென்று கூறுவர். அவ்வூர் சிறுபாணாற்றுப்படையாலும் இவனதென்று தெரிகின்றது. இவனுடைய மற்ற ஊர்களுள் எயிற்பட்டினம், வேலூர், ஆமூரென்பவை தொண்டைநாட்டிலுள்ள இருபத்துநான்கு கோட்டங்களுள் மூன்று கோட்டங்களுக்குத் தலை நகரங்களாக வுள்ளவை. வேலூர் உப்பு வேலூரென்று இக்காலத்து வழங்குகின்றதென்பர். “உறுபுலித் துப்பினோவியர் பெருமகன்” (சிறுபாண். 122) என்பதனால், ஓவியர்குடியிற் பிறந்தவனென்று எண்ணப்படுகின்றான். ஓவியர்குடி நாகர் வகுப்பினுள் ஒரு பிரிவென்பர். இவன்பெயர் ஏறுமா நாட்டு நல்லியக்கோடனெனவும் வழங்கும்.

ஓய்மான் வில்லியாதன்:- இவன் இலங்கை என்னுமூர்க்குத் தலைவன்; இவ்விலங்கை மேற்கூறிய மாவிலங்கையென்னும் ஊரென்பதும் இவன் மேற்கூறிய ஓய்மான் நல்லியக்கோடன் பரம்பரையைச் சார்ந்தோனென்பதும் ஊகித்தறியப்படுகின்றன. இவனைப் பாடிய புலவர் புறத்திணை நன்னாகனார்.

கடியநெடுவேட்டுவன்:- இவன் கொடையாளிகளுளொருவன்; வேடர்கள் தலைவன்; தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவிபுரிந்து பகைவர்களை அழிக்கும் வன்மையுடையவன்; கோடையென்னும் மலைக்குத் தலைவன்; இவனைப் பாடியவர் பெருந்தலைச்சாத்தனார்.

கண்டீரக்கோப்பெரு நள்ளி:- .இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்; தோட்டியென்னும் மலைக்கும் அதனைச் சாரந்த மலைநாட்டிற்கும் காட்டுநாட்டிற்கும் தலைவன்; “கரவாது, நட்டோ ருவப்ப நடைப் பரிகாரம், முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத், துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு, நளிமலை நாட னள்ளியும்” (103 - 7) எனச் சிறுபாணாற்றுப்படையிலும் இவனைப் புகழ்ந்து கூறினர்; இவன் பெயர் கண்டிற்கோப்பெருநள்ளி யெனவும், நள்ளி யெனவும், கண்டிற்கோப்பெருநற் கிள்ளியெனவும் பிரதிகளிற் காணப்படும். இவனைப் பாடிய புலவர்: வன்பரணர், பெருந்தலைச்சாத்தனார்.