பக்கம் எண் :

654

கண்ணகி:- இவள் வையாவிக்கோப் பெரும்பேகனுக்குரியவள்: ஒருகாலத்து அவனால் துறக்கப்பட்டுப் பிரிவாற்றாது வருந்திக் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழாரென்பவர்கள் தன்னை அவனோடு சேர்த்து வைத்தற்கு அவனைப் பாடி வேண்டும்படி பெருமையுற்றவள்; ‘கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர்பாடிய கைக்கிளைவகைப் பாடாண்பாட்டு” (தொல். புறத்திணை. சூ. 35, .) என்பதனாலும் இது விளங்குகின்றது. இவள் சிலப்பதிகாரத்துக் கூறப்பட்டுள்ள கண்ணகியல்லள்.

கந்தன்:- இது நாஞ்சிற் பொருநனது இயற்பெயர்.

கபிலர்:- இவர் வரலாற்றைப் பாடினோர் பெயர்வரிசையிற் காண்க.

கரிகால்வளவன்:- இவன் வரலாற்றைச் சோழன் கரிகாற்பெருவளத்தா னென்னும் பெயரிற் காண்க.

கரும்பனூர்கிழான்:- இவன் வேங்கடமலையைச் சார்ந்த நாட்டை யுடையவன்; இவனைப் பாடியவர்: நன்னாகனார், புறத்திணை நன்னாகனார்.

காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி:- இவன் சோழபரம்பரையைச் சார்ந்தோன்: உறையூரில் இருந்தோன்: சோழன் நலங்கிள்ளிக்குப் பகைவன்: இவன் பெயர் நெடுங்கிள்ளியெனவும் வழங்கும்: ‘இவனைப் பாடியவர் கோவூர்கிழார். ‘இளந்தத்தன்‘ என்னும் புலவர் இவன் காலத்தவரே. ‘காரியாற்றுத் துஞ்சிய‘ என்பதற்குக் காரியாறென்னுமிடத்தில் இறந்த என்பது பொருள்.

கானப்பேரெயில்கடந்தஉக்கிரப்பெருவழுதி:- இவன், சேரமான் மாவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி யென்பவர் களுடைய நண்பன்; கடைச்சங்கமிரீஇய பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவன்; இதனை இறையனாரகப்பொருளுரையாலும் சிலப்பதிகார வுரையாலும் உணர்க. இவன் முன்னிலையில் திருக்குறள் அரங்கேற்றப் பட்டதென்ற செய்தி, அக்குறளுக்கு இவன் கொடுத்த, “நான்மறையின் மெய்ப்பொருளை” என்னும் வெண்பாவிற் காணப்படுகிறது; எட்டுத்தொகையுள் அகநானூற்றைத் தொகுப்பித்தோன் இவனே. “புலவரையிறந்த” என்னும் புறப்பாட்டால், வேங்கைமார்பனென்னும் பகைவனை வென்று அவன் ஆட்சியிலிருந்த பல சிற்றரண்களையுடைய கானப்பேரரணைக் கைக்கொண்டானென்று விளங்குகின்றது; இவன்பெயர், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி யெனவும், உக்கிரப்பெருவழுதி யெனவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி யெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்: ஐயூர் மூலங்கிழார், ஒளவையார்.