பக்கம் எண் :

655

குமணன்:- இவன் மிக்க கொடையாளி; முதிரமென்னும் மலைக்குத் தலைவன்; இவன்காலம் கடையெழுவள்ளல்களின் பிற்காலம். தன் தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடுபற்றியிருந்தபொழுது பெருந்தலைச் சாத்தனார் இரப்பத் தனது தலை கொடுத்தற்கு வாளைக் கொடுத்தோன். இவன் கொடைவிசேடம் முதலியவற்றை, இந்நூல், 158 - 165 ஆம் பாடல்கள் புலப்படுத்தும். இவனைப் பாடிய புலவர்: பெருஞ்சித்திரனார், பெருந்தலைச் சாத்தனார்.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்:- இவன் குளமுற்றமென்னும் இடத்தில் இறந்ததுபற்றி இப்பெயர் பெற்றான்.

கொண்கானங்கிழான்:- இவன் கொடை வெற்றி இரண்டுமுடையோன்; கொண்கானமென்னும் மலைக்குத் தலைவன்; கொண்கானம் - கொங்கணம். இவனைப் பாடிய புலவர் மோசிகீரனார்.

கோச்சேரமான் யானைக்கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை:- இவன் செங்கோலையுடையவன்; யானையினது பார்வைபோலும் பார்வையை யுடையவன்; கொல்லிமலைக்குத் தலைவன்; விளங்கிலென்னும் ஊரார்க்குப் பகைவரான்வந்த துன்பத்தைத் தீர்த்தோன்; கபிலருடைய நண்பன்; கடற்கரையிலுள்ள தொண்டியென்னும் நகரத்தை ஆண்டோன்; ஒரு காலத்து, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் கட்டப்பட்டுப் பின்பு அதனை நீக்கிக்கொண்டு புகழ் பெற்றோன்; சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போர் செய்தோன்; இவன் பெயர் யானைக்கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை யெனவும், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை யெனவும், சேரன் மாந்தரஞ் சேரலிரும்பொறை யெனவும் வழங்கும். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தோன் இவனே. இவனைப் பாடிய புலவர்: குறுங்கோழியூர்கிழார், பொருந்தில் இளங்கீரனார், கூடலூர்கிழார்; இவருள் இவன் இறந்த பின்பும் இருந்தவர்: கூடலூர்கிழார்.

கோப்பெருஞ்சோழன்:- இவனுடைய இராசதானி உறையூர்; பிசிராந்தையார்க்கும் பொத்தியார்க்கும் உயிர் நண்பன்; இவன் தன் பிள்ளைகள் இருவரோடு பகைமைகொண்டு போர்செய்தற்கு எழுந்த பொழுது புல்லாற்றூர் எயிற்றியனாராற் சமாதானம் செய்யப்பட்டான். செய்யுள் செய்தலில் வல்லவன்; இவன், பின்பு எல்லாவற்றையுந் துறந்து வடக்கிருந்து, உடன் உயிர் நீத்தற்குவந்த பொத்தியாரை, ‘மகன் பிறந்த பின் வருக‘ எனக் கூறித் தான் உயிர்நீத்துக் கல்லாகியும், அவ்வாறு வந்த அவருக்கு இடங்கொடுத்துப் புகழ்பெற்றுவிளங்கினான்; இவன் வடக்கிருந்ததைக் கேட்டு வந்த பிசிராந்தையாரும் உடன் உயிர் நீத்தனர்; இதனை, “புணர்ச்சி பழகுதல் வேண்டா” என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகரெழுதிய விசேடவுரை யாலும், “தோழிதாயே” (தொல். கற்பு. சூ, 52) என்பதனுரையாலுமுணர்க. இவன் இளஞ் சேரலிரும்பொறையால் வெல்லப்பட்டான் போலும் (பதிற். 9-ஆம் பத்தின் பதிகம்) . இவனைப் பாடிய புலவர்: பிசிராந்தையார், புல்லாற்றூரெயிற்றியனார், பொத்தியார், கரூவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்; இவ்வரசனும் இப்புலவர்களும் அவ்வச்சமயத்துக் கூறிய பாடல்கள் மிக அற்புதமானவை.

சிறுகுடிகிழான் பண்ணன்:- இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடைய நண்பருள் ஒருவன்; சிறந்தகொடையாளி; “தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன், பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப், புன்காழ் நெல்லிப் பைங்காய்”என அகநானூற்று 54-ஆம் பாட்டிலும் இவன் பாராட்டப்பட்டிருத்தல் காண்க. இவன் பெயர் பண்ணனெனவும் வழங்கும். இவனைப் பாடியவர்கள்: கோவூர்கிழார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.

சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை:- இவன் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியின் பகைவன்; உறையூர் ஏணிச்சேரி முடமோசியாருடைய நண்பன்.

சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்:- இவன் போரில் வல்லவன்; இவனைப் பாடிய புலவர் பரணர். பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தை யேற்று அதனைப் பாடிய பரணர்க்கு உம்பற்காட்டுவாரியையும் தன் மகன் குட்டவன்சேரலையும் பரிசில் கொடுத்தோன் இவனே. இவன் கடலோட்டிய வரலாறு, “கோடுநரல் பௌவங் கலங்க வேலிட், டுடை திரைப் பரப்பிற் படுகடலோட்டிய, வெல்புகழ்க் குட்டுவன்” (பதிற். 46) . “மட்டவிழ் தெரியன் மற்போர்க் குட்டுவன், பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து, செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்கு திரைப் பௌவ நீங்க வோட்டிய, நீர்மா ணெஃகம்” (அகநா. 212) , “கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி” (சிலப். 28 : 119) , “பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டி” (சிலப். 30 : கட்டுரை, 19) , என்பவற்றாலும் அறியலாகும். இவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனெனவும் வழங்கப்படுவன்.

சேரமான் கடுங்கோவாழியாதன்:- இவன் சிறந்த வீரன்; பதிற்றுப்பத்தில், கபிலர்பாடிய ஏழாம்பத்தைக் கேட்டு அவருக்கு நூறாயிரம் காணமும், ஒரு மலைமீதேறிக்கண்ட நாடும் பரிசிலாகக் கொடுத்தனன். இதனைப் பதிற்றுப்பத்து, 7-ஆம் பத்தின் பதிகத்தால் உணர்க. இவனைப் பாடிய புலவர்: கபிலர்.

சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறை:- இவனைக் கண்டபொழுது நரிவெரூஉத்தலையார்க்குப் பழைய நல்லுடம்பு கிடைத்தது; இவனைப் பாடிய புலவர் அவரே.

சேரமான்குட்டுவன் கோதை:- இவன் இரவலர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்பவன்; வீரன்; குட்டுவன் - குட்டநாட்டரசன்; குட்டநாடு - மலைநாட்டின் ஒருபகுதி. இவனைப்பாடிய புலவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்.

சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறை:- இவன் பெயர் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையெனவும் வழங்கும்; பதிற்றுப்பத்தில், ஒன்பதாம் பத்திற்குத் தலைவன் இவனே; இவனைப் பாடியவர் பெருங்குன்றூர்கிழார்.