பக்கம் எண் :

663

நெடுங்கிள்ளி:- இவன் சோழபரம்பரையைச் சார்ந்தோன்; ஆவூரும் உரையூரும் இவனுடையவை; சோழன் நலங்கிள்ளி இவற்றை முற்றி இருந்தபொழுது கோட்டைவாயிலை அடைத்துக்கொண்டு உள்ளேயிருந்த இவன் பின்பு கோவூர்கிழாரால் தேற்றப்பட்டான்; காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியெனவும் இவனுக்குப் பெயருண்டு; இவனைப் பாடிய புலவர்: கோவூர்கிழார்.

நெடுமானஞ்சி:- அதியமான் நெடுமானஞ்சியென்னும் பெயரைப் பார்க்க.

நெடுவேளாதன்:- இவனைப் பாடியவர் குன்றூர்கிழார்மகனார்.

பரதவர்:- தென்றிசைக்கட் குறுநிலமன்னர்; “தென்பரதவர் மிடல்சாய” என இந்நூலிலும், “தென்பரதவர் போரேறே” (144) என மதுரைக் காஞ்சியிலும் கூறப்பட்டிருத்தல் காண்க.

பழையன்:- இவன் பாண்டிய நாட்டிலுள்ள மோகூரிலிருந்த குறு நிலமன்னன்; இதனை மதுரைக்காஞ்சியாலுணர்க; இவன் காவன் மரமாக ஒருவேம்பினை வளர்த்துவந்தானென்று பதிற்றுப்பத்தால் தெரிகின்றது; 5-ஆம் பத்தின் பதிகம். சோழநாட்டிற் போரென்னுமூர்க்குத் தலைவனாகப் பழையனொருவன் இருந்தானென்றும் தெரிகின்றது; அகநா. 186.

பாண்டியன் அறிவுடை நம்பி:- இவன் சிறந்த அறிவுடையோன்; இவன் காலத்து புலவர் பிசிராந்தையார்.

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறன்:- இவன் தமிழ் நாட்டரசர் மூவரிலும் மேம்பட்டு விளங்கினோன். இவனைப் பாடியவர்கள்: மதுரை மருதனிளநாகனார், மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், இடைக் காடனார், வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்.
பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி:- இவன் மிக்க வீரமும் கொடையுமுடையோன். இவனைப் பாடிய புலவர் இரும்பிடர்த் தலையார்.

பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதி:- இவனைப் பாடியவர் ஒளவையார். கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி யென்னும் பெயரைப் பார்க்க.

பாண்டியன் கீரஞ்சாத்தன்:- இவன் வந்தோர்க்கு அன்புடன் உணவளிப்போன்; சிறந்த வீரன்; இவன் பெயர் பாண்டிக்குதிரைச் சாக்கையனெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவனைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார்.

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி:- இவன் மிக்க வீரச்செல்வமுடையோன்; வடநாட்டரசரை வென்று அடிப்படுத்தினோன். இவனைப்பாடிய புலவர்கள்: ஐயூர்முடவனார், மருதனிளநாகனார்.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்:- இவன் தன்னைச்சேர்ந்தோருக்கு மிக்க நன்மையும் பகைவருக்குத் துன்பமும் புரிபவன்; இவனைப் பாடியவர்: மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.