| இவனாற் செய்விக்கப் பெற்றதென்று இறையனாரகப் பொருளுரை, நன்னூல் மயிலைநாதருரை முதலியன தெரிவிக்கின்றன; நன்னூல் மயிலை நாதருரையில் (சூ. 372) திரையனாற் செய்யப்பட்ட ஊர் திரையனது ஊரென்றுபொருள் செய்திருத்தலின், இப்பெயருள்ள ஊரொன்று பண்டைக்காலத்தில் இவனாலோ பிறராலோ நிருமிக்கப்பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. “வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட், டோங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்” (அகநா. 213) , “பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ, பாவீற் றிருந்த புலவிர்காள் பாடுகோ, ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார், கோவீற் றிருந்த குடை”, “வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன், நான்மாடக் கூடலிற் கல்வலிது, சோழனுறந்தைக் கரும்பினிது தொண்டைமான், கச்சியிற் காக்கை கரிது”, ”ஆழி யிழைப்பைப் பகல்போ மிரவெல்லாம், தோழி துணையாத் துயர் தீரும் - வாழி, நறுமாலை தாராய் திரையவோஓ வென்னும், செறுமாலை சென்றடைந்த போது” (யா. வி. மேற்.) என்பவற்றால், இவன் பரம்பரையோருடைய பெருமைகள் புலப்படும். நம்பிநெடுஞ்செழியன்:- இவன் அரசர்களுக்குரிய எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன்; பலவித நன்மைகளையுமுடையவன். இவனைப் பாடிய புலவர் பேரெயின்முறுவலார். நள்ளி:- இவன் கடையெழுவள்ளல்களில் ஒருவன்; இரப்போர்க்கு இழையணி நெடுந்தேர் களிற்றொடும் ஈவோன்; (அகநா. 237) . கண்டீரக்கோப்பெருநள்ளியென்னும் பெயரைப் பார்க்க. பாண்டிநாட்டில் நள்ளியென ஓரூர் உள்ளது. நன்னன்:- இவன் விச்சிக்கோவின் பரம்பரையில் முன்னுள்ளோன்; பல்குன்றக்கோட்டமுடையவன். இவன் மகன் நன்னன்மீது (மலைபடு. 64) இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் மலைபடுகடாம் பாடினர். “சூழி யானைச் சுடர்ப்பூ ணன்னன், பாழியன்ன”, “நறவுமகி ழிருக்கை நன்னன் வேண்மான், வயலை வேலி வியலூரன்ன”. (அகநா. 15 : 10 - 1, 97 : 12 - 3) எனக் கூறியிருத்தலாற் புகழுடையவனென்று இவன் நினைக்கப்படுகின்றான். இவனைப் பாராட்டிய புலவர் பெருந்தலைச்சாத்தனார். நாஞ்சில்வள்ளுவன்:- இவன் நாஞ்சில்மலையை யுடையவன்; சேரனிடத்து அன்புற்று அவனுக்குப் படைத்துணையாய் நின்றோன்; பரிசிலர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்போன்; இவனைப் பாடியவர்கள்: ஒளவையார், ஒருசிறைப்பெரியனார், மருதனிளநாகனார், கருவூர்க்கதப்பிள்ளை. நாலைகிழவன் நாகன்:- இவன் பாண்டியனுடைய வீரன்; மிக்க கொடையையுடையவன்; இவனைப் பாடிய புலவர் வடமநெடுந்தத்தனார். இவன் பெயர் நாலைகிழானாகனெனவும் வழங்கும். ‘நாலை’ என்பதை ‘நரலை’ எனவும் படிப்பதற்கிடமுண்டு.
|