பக்கம் எண் :

661

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்:- இவன் இளமைப்பருவத்தில் தலையாலங்கானத்தில் கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையோடு போர்செய்து அவனைச் சிறைப்படுத்தியதன்றிச் சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்பவரையும் வென்றான்; வேள் எவ்வியின் மிழலைக்கூற்றத்தையும் பழைய வேளிருடைய முத்தூற்றுக் கூற்றத்தையும கைக்கொண்டான்; மறக்களவேள்வியும் அறக்களவேள்வியும் செய்தான்; செய்யுள் செய்தலில் வல்லவன்; புலவர்களிடத்து மிக்க அன்புள்ளவன்; உத்தமகுணங்கள் பலவும் உடையோன். மாங்குடி மருதனாரியற்றிய மதுரைக்காஞ்சிக்குத் தலைவன் இவனே. “நகுதக்கனரே” (72) என்னுஞ் செய்யுளை இயற்றியவனாதலால், இவன் நல்லிசைப் புலவர் வரிசையில் விளங்கியவனென்று தெரிகின்றது. “பல்யானை மன்னர் முருங்க” (யா, வி. மேற்.) என்னும் பாடலும் இவன் வரலாற்றின் ஒரு பகுதியைத் தெரிவிக்கும். இவன் பெயர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுங்செழியனெனவும், பாண்டியன் நெடுஞ்செழியனெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்: குறுங்கோழியூர்கிழார், குடபுலவியனார், கல்லாடனார், மாங்குடிகிழார், இடைக்குன்றூர்கிழார்.

தழும்பன்:- இவனைப் பாடியவர் பரணர்.

தாமான்தோன்றிக்கோன்:- இவன் தோன்றியென்னும் மலைக்குத் தலைவன்; இவனைப் பாடிய புலவர் ஐயூர்முடவனார்.

தித்தன்:- இவன் உறையூரிலிருந்த ஒரு சோழன்; “நொச்சி வேலித்தித்த னுறந்தை” (அகநா. 122) . சோழன் போர்வைக்கோப்பெரு நற்கிள்ளியின் தந்தை; அவனோடு மிக்க பகைமைகொண்டிருந்தான்.

தேர்வண் மலையன்:- இவன் சிறந்த வீரன்; சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணையாய்நின்று சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறையை வென்றான்; இவனைப் பாடிய புலவர் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்.

தொண்டைமான்:- இவன் காஞ்சி நகரத்திருந்த ஓரரசன்; அதியமான் நெடுமானஞ்சி காலமும் இவன் காலமும் ஒன்றே; இவன் காலத்தவர் ஒளவையார். இவன் தொண்டைமான் இளந்திரையனென்றும் வழங்கப் பெறுவன்; பெரும்பாணாற்றுப்படைக்குத் தலைவன் இவனே; இவனுடைய பிறப்பின் வரலாறு அந்நூல், 29-31-ஆம் அடிகளால் அறியலாகும்; அதில் நாககன்னியென்றது, பீலிவளையையே என்றும் (மணி. 24 : 57) அதற்குத் தக்க ஆதாரம் சாசனத்திலும் நூல்களிலுமுள்ளதென்றும் சொல்லுகின்றனர்; இவன் முடியுடை மன்னர் மூவரோடு சேர்த்து எண்ணப்படும் பெருமை வாய்ந்தவனேனும், “வில்லும் வேலும்” (தொல். மரபு. சூ. 83) என்பதன் உரையில், ‘மன்பெறு மரபி னேனோரெனப்படுவார், அரசுபெறு மரபிற் குறுநில மன்னரெனக் கொள்க; அவை பெரும்பாணாற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் காணப்படும்’ எனப் பேராசிரியர் எழுதியிருத்தலால், இவனைக் குறுநிலமன்னனாகப் பண்டையோர் கொண்டிருந்தனரென்று தெரிகின்றது. இப்பெயர் இளந்திரையனெனவும் திரையனெனவும நூல்களில் வழங்கும். இவனியற்றிய பாடல்களாக நற்றிணையில் மூன்றும் இந்நூலில் ஒன்றும் காணப்படுதலால், இவன் நல்லிசைப்புலவர் வரிசையிற் சேர்ந்த பெருமை வாய்ந்தவனென்றும் தெரிகின்றது. இளந்திரையமென ஒரு நூல்