பக்கம் எண் :

660

சோழன் நலங்கிள்ளி:- இவன் கவிசெய்தலில் வல்லவன்; பாண்டிய நாட்டிலிருந்த ஏழரண்களை அழித்துக் கைக்கொண்டு அவற்றில் தனது புலிக்கொடியை நாட்டினான்; தன் தாயத்தாரோடு பகைத்து அவர்கள் இருந்த ஆவூரையும் உறையூரையும் முற்றுகை செய்தான்; மாவளத்தானென்ப வனுக்குத் தமையன்; இவனுக்குச் சேட் சென்னியென்றும் புட்பகையென்றும் தேர்வண்கிள்ளியென்றும் பெயருண்டு; நெடுங்கிள்ளி யென்பவனோடு பகைமையுடையோன்; முன்னர், போர்செய்து வெற்றி கொள்ளுதலையே பொருளாகக் கொண்டிருந்த இவன் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லாற் பின்பு அதனைத் துறந்து அறஞ்செய்தலையே மேற்கொண்டான்; இவனைப் பாடிய புலவர்கள்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர்கிழார், ஆலத்தூர்கிழார்.

சோழன் நலங்கிள்ளிதம்பி மாவளத்தான்:- இவனைப் பாடிய புலவர் தாமப்பல்கண்ணனார்.

சோழன் நெய்தலங்கான லிளஞ்சேட்சென்னி:- இவனைப் பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்; நெய்தலங்காலையெனவும் இப்பெயர் சில பிரதிகளிற் காணப்படுகின்றது.

சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி ;- இவன் தித்தனென்னுஞ் சோழனுடைய மகன். அவனோடு பகைத்து நாடிழந்து வறுமையுற்றுப் புல்லரிசிக்கூழை யுண்டிருந்தான்; முக்காவல்நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது கொன்றான். இவனைப் பாடிய புலவர்கள்: சாத்தந்தையார், பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்.

சோழன் முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி:- இவன் சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையோடு பகைமையுடையவன்; இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச்சேரிமுடமோசியார்.

சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி:- இவன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனோடு போர்செய்து இறந்தான். அக்காலத்து இவனைப் பாடிய புலவர்: கழாத்தலையார், பரணர்; இவன் பெயர் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியெனவும் வழங்கும்.

சோழியவேனாதி திருக்குட்டுவன்:- இவன் மிக்க கொடையாளி; இவனைப் பாடிய புலவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.

தந்துமாறன்:- மிக்க ஒழுக்கமுடையவன்; நிலையாமையை இவனுக்கு அறிவுறுத்திய புலவர் சங்கவருணரென்னும் நாகரியர்.

தருமபுத்திரன்:- இவன் ஓரரசன்; இவனைப் பாடிய புலவர் கோதமனார்.