| மலையமான் மக்கள்:- இவர்கள் தம் குலப்பகைவனாகிய சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் தம்மை யானைக்கு இடத்தொடங்கிய பொழுது கோவூர்கிழாராற் பாடி உய்விக்கப்பட்டார்கள். மாங்குடி மருதனார்:- இவர் மதுரைக்காஞ்சி யென்னும் நூலின் ஆசிரியர்; பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனால் நன்கு மதித்துப் பாடப்பட்டார். இவருடைய பிறவரலாறுகளைப் பத்துப்பாட்டில், பாடினோர் வரலாற்றிற் காண்க. மாவளத்தான்:- இவன் சோழன் நலங்கிள்ளியின் தம்பி; தாமப் பல்கண்ணனாரோடு வட்டாடியபொழுது, அவர் கைகரப்பத் தான் வெகுண்டு வட்டுக்கொண்டெறிந்து, அவர் ‘நீ சோழன்மகனல்லை’ என்று சொல்ல நாணமுற்றுப் பின்பு அவராற் புகழ்ந்து பாடப்பெற்றான். இவனைப் பாடியவர் மேற்கூறிய தாமப்பல் கண்ணனார். முக்காவனாட்டு ஆமூர்மல்லன்:- இவன் மற்போரிற் சிறந்தவன்: உறையூரிலிருந்த சோழனாகிய தித்தன்மகன் போர்வைக்கோப் பெரு நற்கிள்ளியாற் பொருது கொல்லப்பட்டவன். இவன்காலத்தவர் சாத்தந்தையார். முதியன்:- ஆதனுங்கனென்பவனது இயற்பெயர் இது; அப்பெயரைப் பார்க்க. மூவன்:- இவன ஒரு சிற்றரசன்; விரைந்து பரிசில்கொடாமையால் பெருந்தலைச் சாத்தனாரால் இகழ்ந்து பாடப்பட்டான். மூவேந்தர்:- சேரசோழபாண்டியர்; இவர்கள் வேள் பாரியென்னும் வள்ளலை வஞ்சனையாற் கொன்றார். யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை:- கோச்சேரமான் யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை யென்பதைப் பார்க்க. வடிம்பலம்பநின்ற பாண்டியன்:- இவன் கடற்றெய்வத்திற்குப் பெரியதொரு விழவு செய்தான்; பஃறுளியாற்றை உண்டாக்கினான். இன்னும் இவன் பெருமையை மதுரைக்காஞ்சியாலும், சிலப்பதிகாரத்தாலும் உணர்க. வல்லார்கிழான் பண்ணன்:- இவன் வல்லாரென்னும் ஊரிலுள்ளவன்; பண்ணனென்னுமியற்பெயரையும் உடையான்; சிற்றரசன். இவனை பாடிய புலவர் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார். வல்வில் ஓரி:- இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்; கொல்லி மலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன்; “காரிக்குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை யோரியும்” எனக் சிறுபாணாற்றுப் படையிலும் இவனைப் புகழ்ந்து கூறினர். இவன் பெயர் ஆதனோரி யெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்: வன்பரணர், கழைதின் யானையார்.
|