பக்கம் எண் :

667

வாட்டாற்றெழினியாதன்:- இவன் சிறந்த கொடையாளி; வாட்டாறு என்னும் ஊரிலுள்ளவன். இவனைப் பாடிய புலவர் மாங்குடிகிழார்.

விச்சிக்கோன்:- இவன் சிற்றரசருளொருவன். பாரிமகளிரை மணஞ்செய்து கொள்ளும்படி கபிலரால் வேண்டிப் பாடப்பெற்றோன். இவன் சேரமான் குடக்கோவிருஞ்சேரலிரும்பொறையால் வெல்லப்பட்டான்; பதிற். 9-ஆம் பத்தின் பதிகம் பார்க்க.

வெளிமான்:- இவன் சிற்றரசன்; மிக்க கொடையாளி; இவன் காலத்தவரும் இவனிறந்தபின்பு பிரிவாற்றாது வருந்திப் பாடியவரும் பெருஞ்சித்திரனார்.

வேங்கைமார்பன்:- இவன் கானப்பேரெயிலின் தலைவன்; பாண்டியன் உக்கிரப்பெருவழுதியால் வெல்லப்பட்டான். இவன்காலத்துப் புலவர் ஐயூர் மூலங்கிழார்.

வேள் எவ்வி:- இவன், 1வேளாளருள் உழுவித்துண்போர் வகையினன்; மிழலைக் கூற்றத்துத் தலைவன்; மிகுந்த கொடையாளி; தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டோன். “ஓம்பா வீகை மாவே ளெவ்வி”, “எவ்விதொல்குடி”, “போரடுதானை எவ்வி” என இந்நூலிலும், “எவ்வி யிழந்த வறுமை யாழ்ப் பாணர், பூவில் வறுந்தலை போல” (19) எனக் குறுந்தொகையிலும் சான்றோர் இவனைப் புகழ்ந்து கூறியிருத்தல் காண்க. கடற்கரைக்கணுள்ள நீழலென்னுமூர் இவனுடையது; அகநா. 366. இவனைப் பாடியவர்கள்: மாங்குடிகிழார், கபிலர், வெள்ளெருக்கிலையார். இவருள், இவன் இறந்த பின் வருந்திப் புலம்பியவர், வெள்ளெருக்கிலையார்.

வேள்பாரி:- இவன் கடையெழுவள்ளல்களில்’ ஒருவன்; இவன் வரலாற்றைப் பாரி யென்னும் பெயரிற் காண்க.

வையாவிக் கோப்பெரும் பேகன்:- இவன், கடையெழு வள்ளல்களில் ஒருவன்; மலைநாட்டையுடையவன்; மயிற்பறவைக்குப் போர்வை கொடுத்தோன்; இவனது ஊர் நல்லூரென்பது; ஆவியர்குடியிற் பிறந்தவன். இதனை இவன் பெயராலும், சிறுபாணாற்றுப்படையாலும் உணர்க. தனக்குரியவளாகிய கண்ணகியென்பவளைத் துறந்ததனால்,


1. வேளாளர் உழுவித்துண்போரும், உழுதுண்போருமென இரு வகையினர். அவருள், உழுவித்துண்போர் மண்டிலமாக்களும், தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரு முதலிய பதியிற்றோன்றி வேளெனவும், அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடிக் குடிப் பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளராம்’ (தொல். அகத்திணை. சூ. 30, .)