பக்கம் எண் :

693

முதன்முறை இந்நூலை அச்சிட்டு வருகையில் சிலாசாஸனம் முதலியவற்றில் அறிதற்குரிய சிலவற்றைத் தெரிந்துகொள்ளுதற்பொருட்டு நான் வினாவியபோது ராவ்பகதுார் வி. வெங்கையரவர்களும், ராவ்பகதூர் வி. கனகசபைப் பிள்ளையவர்களும் அனுப்பிய விடைகள் அரும்பத முதலியவற்றின் அகராதியில் உரிய இடங்களில் அடிக்குறிப்பாகச் சேர்க்கப்பெற்றுள்ளன.

பாடல்களிலும், அவற்றின் பின்னர்த் திணைதுறைகளையும் பாடப்பட்டோர் பாடினோர்களையும் தனித்தனியே தெரிவிக்கும் வாக்கியங்களிலும், உரைகளிலும் பிரதிகளிற் சொற்கள் சிதைந்தவிடத்தைப் புலப்படுத்தற்கு (......) இவ்வொற்றைப்புள்ளி நிரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதிபேதங்களும், எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன.

உரை கிடையாதவிடத்து ஒருவகையாலும் பொருள் காணாத விதம் சிதைவுற்றிருந்த மூலங்கள் ஏட்டுப்பிரதியிலிருந்த படியே புள்ளியிடுதல் முதலியனவின்றிப் பதிப்பிக்கப்பட்டன.

இதிற் கொடுத்துள்ள பிரதிபேதங்களுள்ளே சிலசிலவற்றிற்குமட்டும் பொருள் புலப்படும்; பலவற்றிற்குப் புலப்படா. அவை பிழைகளாகவே இருத்தலும் கூடும்; ஆனாலும், வேறு பிரதிகள் கிடைப்பின் அவற்றோடு ஒப்புநோக்கி உண்மையான உருவங்களை அறிந்துகொள்ளுவதற்கு அனுகூலமாக இருக்கு மென்றெண்ணியே பிரதிகளிற் காணப்பட்ட பலவகையான பேதங்களும் உள்ளபடியே அங்கங்கே காட்டப்பட்டிருக்கின்றன. ஒற்றுப்புள்ளி முதலியவற்றை நீக்கி அவற்றைப் படித்தல் நலம்.

சில சுவடிகளில் ஈகார ஐகார உயிரீற்றின்பின் யகரம் வரையப் பெற்றிருந்தமையின், அம்மொழிகள் அவ்வாறே உரிய இடங்களிற் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

இந்நூற்பகுதிகளுள் சில சிவஞானபாடியத்தில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன; அவை வருமாறு:

(1) “கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை” 6-ஆம் சூ. 2-ஆம் அதி.

(22) “துாங்கு கையா னோங்குநடைய” 5-ஆம் சூ. 1-ஆம் அதி.

(124) “நாளன்று போகி” 2-ஆம் சூ. 4-ஆம் அதி.

(395) “நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து” 8-ஆம் சூ. 1-ஆம் அதி.