பக்கம் எண் :

694

இந்நூல் 41, 78, 151-ஆம் பாடல்களின் உரைகளில் மேற்கோளாக வந்துள்ளன “ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப” என்பது வேறு பல உரைகளில் “புலைய னெறிந்த பூசற் றண்ணுமை” என்பதனோடு சேர்ந்து வழங்கக்காணப்பட்டும், இன்ன நூலில் இன்ன பாடலிலுள்ளதென்று புலப்படாமலிருந்தது. பிறகு, தமிழ்நெறிவிளக்கமென்னும் பழைய இலக்கண நூலொன்றில் வந்துள்ள மேற்கோளாகிய,

“நிரையிர் செல்லு மோவென நேர்ந்து
புலைய னெறிந்த பூசற் றண்ணுமை
ஏவ லிளையர் தாய்வயிறு கரிக்கும்
இன்னா வருஞ்சுர மென்ப
என்னோ தோழியவர் சென்ற வாறே”

என்னும் செய்யுளின் 3-ஆம் அடியின் பாடபேதமென்று தெரியவந்தது.

இந்நூலிலுள்ள செய்யுட்களைப் பாடிய நல்லிசைப் புலவர்களுடைய வரலாறுகளும், அவர்களால் இந்நூற் செய்யுட்களிற் பாடப்பட்டவர் வரலாறுகளும் தனித்தனியே இதிற் காணப்படும். இவை இரண்டாம் பதிப்பிலுள்ளாவறே அமைக்கப்பட்டன; செய்திகளில் வேறுபாடு இல்லையேனும் சில செய்யுட் பகுதிகள் மாத்திரம் நீக்கப்பட்டன.

மேற்கூறிய இருவகையார் பெயர்களுட் சில பெயர் கையெழுத்துப் பிரதிகளிற் பலவகைப்பட்ட விசேடணத்தோடு கூடியும் கூடாமலும் வேறுவேறிடத்து வேறுவேறு விதமாக எழுதப்பட்டும் இருந்தன; அவை இன்ன பெயரின் பரியாயங்களெனத் தெரிந்தும் அவற்றை ஒரேவிதமாகத் திருத்திவிடாமல் ஏனைத் தொகைகளிலும் மற்றை நூல்களிலும் உரைகளிலும் வழங்கும் பழைய வழக்கத்தைத் தெரிவித்தற்கு அவை பிரதிகளில் இருந்தவாறே பதிப்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றற்கு

உதாரணம் :-

(1) மாந்தரஞ் சேரலிரும்பொறை, (2) சேரமான்மாந்தரஞ் சேரலிரும்பொறை, (3) யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும் பொறையார், (4) சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை, (5) கோச்சேரமான் யானைக்கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை.

மேற்கூறிய இருவகையோருடைய பெயர்களிற் சிலபெயர்களுக்குக் காரணம் புலப்படுகின்றது; பலவற்றிற்குப் புலப்படவில்லை.

தாம் பாடிய செய்யுட்களிலுள்ள தொடர்மொழிச் சிறப்பாற் சில புலவர்களுக்குப் பெயர்வந்திருத்தல் கூடுமென்று தோற்றினும் இந்நூலிலாவது வேறு நூலிலாவது அப்பாடல்கள் அகப்படாமையின் துணிந்து காரணம் எழுதக்கூடவில்லை.