| நாளடைவிற்செய்துவந்த ஆராய்ச்சியின் பயனாக இந்நூலிற் கண்ட நல்லிசைப் புலவர், அரசர்கள், உபகாரிகள் முதலியோர் வரலாறுகளுக்குரிய பல செய்திகள் இப்பொழுது விளங்குகின்றன. அவற்றையும் சேர்த்து விரிவாக எழுத எண்ணியிருந்தும் இப்போது போதிய அவகாசமின்மையால்அங்ஙனம் செய்யக்கூட வில்லை. மேற்கூறிய வரலாறுகளைத் தனித்தனியே விரிவாக எழுதி வெளியிடவேண்டுமென்பது எனது நோக்கமாதலின் அங்ஙனம் வெளியிடுங்கால் அச்செய்திகளைச் சேர்த்துக்கொள்ளக் கருதியிருக்கின்றேன். அம்முயற்சி நிறைவேறும்படி செய்வித்தருளும் வண்ணம் இறைவன் திருவருளைச் சிந்தித்து வந்திக்கின்றேன். சிலருடைய விருப்பத்தின்படி புறநானூற்றின்மூலம் மாத்திரம் அதற்குரிய அங்கங்களுடன் தனியே பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இப்பதிப்புக்கு உடனிருந்து உதவி செய்தவர்கள் சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி வித்வான் வி. மு. சுப்பிரமணிய ஐயரும், சிரஞ்சீவி வித்வான் கி. வா. ஜகந்நாதையரும் வேறு சில அன்பர்களும் ஆவர். ‘தியாகராச விலாசம்’ திருவேட்டீசுவரன் பேட்டை 20-12-35 | | இங்ஙனம், வே.சாமிநாதையர் |
|