பக்கம் எண் :

1

புறநானூறு
மூலமும் உரையும்


1. கடவுள் வாழ்த்
து

     இக்கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
பெருந்தேவனார் என்பது இவ்வாசிரியரது இயற்பெயர். தமிழில் பாரதத்தைப்
பாடிய செயல்பற்றி இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என
வழங்கப்படுகின்றார். இப்போது வெளியாகியிருக்கும் பாரத வெண்பா வென்னும்
நூல் இவர் பாடிய தென்று கூறுவர். இப் பாரத வெண்பா உரையிடையிட்ட
பாட்டு. சங்கத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
அகநானூறு, புறநானூறு என்ற இவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப்
பாடிச் சேர்த்தவர் இவர். இதனால் இவர் கடவுட்கொள்கை நிறைந்த
வுள்ளமுடையரென்பது புலனாகும். இவர் பெரும்பாலும் சிவனையும்
முருகனையும் பாடியிருக்கின்றார்; நற்றிணையில் உள்ள பாட்டு திருமாலைக்
குறித்து நிற்பதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்களால்
உரைகாணப்பட்டுள்ளது.


     இப்பாட்டின்கண் ஆசிரியர் பெருந்தேவனார்,சிவனை அருந்தவத்தோன்
என்று குறிப்பிட்டு,  அவனுக்குக்  கண்ணியும்   மாலையும்  கொன்றை;
ஊர்தியும்  கொடியும்  ஆனேறு என்று குறித்து, அவனுடைய கறைமிடறும்,
பெண்ணுருவாகிய  திறனும்,  தலையிற்  சூடிய  பிறையும்   முறையே
அந்தணராலும்  பதினெண் கணங்களாலும்   புகழவும் ஏத்தவும்  படும்  
எனத்  தெரிவித்து, அதனால் நாமும்  அவனை  வணங்கி  வாழ்த்துதல்
வேண்டும் என்ற கருத்தை உய்த்துணர வைக்கின்றார்.

கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப
5.கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு ஒருதிரு னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்