| | பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை | 10. | பதினெண் கணனு மேத்தவும் படுமே எல்லா உயிர்க்கும் ஏம மாகிய நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. (1) |
உரை : கண்ணி - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி;கார் நறுங் கொன்றை - கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை - அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ; ஊர்தி வால் வெள்ளேறு - ஏறப்படுவதுதூய வெளிய ஆனேறு; சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப - மிக்க பெருமைபொருந்திய கொடியும் அவ்வானே றென்று சொல்லுவர்; கறை மிடறு அணியலும் அணிந்தன்று - நஞ்சினது கறுப்பு திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது; அக்கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படும் -அக்கறுப்புத்தான் மறுவாயும் வானோரையுய்யக் கொண்டமையின் வேதத்தைப் பயிலும் - அந்தணராற் புகழவும் படும்; பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று - பெண்வடிவு ஒருபக்கம் ஆயிற்று; அவ்வுறு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் - ஆய அவ்வடிவுதான் தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று - பிறை திரு நுதற்கு அழகாயது; அப்பிறை பதினெண்கணனும் ஏத்தவும் படும் - அப்பிறைதான் பெரியோன் சூடுதலாற் பதினெண்கணங்களாலும் புகழவும்படும்; எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய - எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய; நீர் அறவு அறியாக்கரகத்து - நீர் தொலைவறியாக் குண்டிகையானும்; தாழ் சடை - தாழ்ந்த திருச்சடையானும்;பொலிந்த-சிறந்த;அருந்தவத்தோற்கு -செய்தற்கரிய தவத்தை யுடையோனுக்கு எ-று.
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளே யடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் என்று உரைப்பினும் அமையும். நீரறவு அறியாக் கரகம் கங்கை யென்பாருமுளர். அக்கறை, அவ்வுரு, அப்பிறை என நின்ற எழுவாய்கட்கு, நுவலவும் படும், கரக்கினும் கரக்கும், ஏத்தவும் படும் என நின்ற பயனிலைகள் நிரலே கொடுக்க, இவ்வெழு வாய்களையும் பிறவற்றையும் அருந்தவத்தோனென்க. ஏமமாகிய நீர் எனினு மமையும். அணியலு மணிந்தன்று என்பது உண்ணலு முண்ணேன் (கலி. 23) என்பது போல நின்றது. பதினெண்கணங்களாவார் தேவரும் அசுரரும் முனிவரும் கின்னரரும் கிம்புருடரும் கருடரும் இயக்கரும் இராக்கதரும் கந்தருவரும் சித்தரும் சாரணரும் வித்தியாதரரும் நாகரும் வேதாளமும் தாராகணமும்
|