| ஆகாசவாசிகளும் போகபூமியோரு, மென இவர்; பிறவாறும் உரைப்பர். இப்பெரியோனை மன மொழி மெய்களான் வணங்க, அறமுதல் நான்கும் பயக்கும் என்பது கருத்தாகக் கொள்க.
விளக்கம் : தலையிற் சூடப்படுவது கண்ணி யென்றும், மார்பில் அணியப்படுவது மாலை யென்றும் வழங்குவது மரபாதலால், கண்ணியென்பதற்குத் திருமுடிமேற் சூடப்படும் கண்ணி யென்றார். காமர், அழகு, வண்ணம், முன்னது நிறமும் பின்னது அழகும் குறித்து நின்றது. செம்மேனியிற் கறுப்புநிறங் கொண்டு நிற்பதுபற்றி, கறையை நஞ்சுக் கறுப்பென்றும், அது நஞ்சினால் உண்டானதுபற்றி, நஞ்சினது கறுப்பு என்றும் உரைத்தார். அது மறை நவிலும் அந்தணராற் பரவப் படுதற்குக் காரணம் தொக்குநிற்றலின், அதனை விரித்து, வானோரையுய்யக் கொண்டமையின் என்று உரை கூறினார். மறுவாயும் என்றது, அக்கறை மறுவாய் நுவலப்படுதற் குரித்தன் றாயினும் என்பதுபட நின்றது. நவிலுதல், பயிலுதல்; வினைநவில் யானை - (பதிற்.82) என்பதன் உரை காண்க. பிறை மகளிரால் தொழப்படுமேயன்றி ஏனோரால் பெரிதும் தொழப்படுதற்குக் காரணம் பெரியோன் சூடுதலால் என்பதனால் காட்டினார். அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு, எல்லாப் பொருளையும் தன்னுள்ளே அடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும் என்று வேறு பொருள் கூறினும் பொருந்தும் என்றுரைக்கின்றார். அருந்தவத்தோற்கு அக்கறை நுவலவும் படும்; அவ்வுரு கரக்கினும் கரக்கும்; கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர், பொன்னமர் பூதர் புகழியக்கர்- மன்னும், உரகர் சுரர்சாரணர் முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம், ஏந்து புகழ் மேய விராக்கதரோ டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போக புவி யோருடனே, ஆகாச வாசிகளா வார் என அடியார்க்கு நல்லார் காட்டும் பழைய வெண்பாக்களால் வேறு வகைப்படக் கூறுதலும் உண்டெனத் தோன்றுவதுபற்றி, பிறவாறும் உரைப்ப என்றார். |