| வழுதி, தமிழ் பொதுவெனப் பொறானாய்க் கொண்டி வேண்டுவனாயின், கொடுத்த மன்னர் நடுக்கற்றனர்; கொடாமையின் அவன் அளியிழந்தோர், ஒரு பகல் வாழ்க்கைக் குலமருவோர்; ஆதலான் அவர் அளியரோ அளியர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க; அவன் அளியிழந்தோராகிய உலமருவோர் அளியரெனக் கூட்டி யுரைப்பினு மமையும். அளியரோ அளிய ரென இரங்கற்குறிப்புத் தோன்ற அடுக்கி நின்றது.
விளக்கம்: மாறன் வழுதி போர் வேட்டெழுந்த எழுச்சி காண்போர் தம்முட் கூறுவதுபோல் அமைந்துள்ளது. அரணழித்தற்கு நீர் மிகுதியும், வெம்மை செய்தற்குத் தீ மிகுதியும், மோதி முருக்குதற்கு வளியும் உவமமாயின. கொள்ளப்படுவது கொண்டி; அஃது ஈண்டுக் கொள்ளப்படும் திறைமேல் நின்றது. திறையை முன்னே செலுத்திவிட்டு இதனைக் கொள்க எனப் பின்னே வாயாற் சொல்லி வேண்டுதல் திறை செலுத்தும் முறையாதலால், கொள்க வென்று சொல்லி முன்னே கொடுத்த மன்னர் என வுரைத்தார். கொடாதார் ஈயல் போல ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோராவர் என்க. அவரது உலமரும் நிலையினைக் கண்டு இரங்கிக் கூறுதலின் அளியரோ வளியர் என்று இயம்புகின்றார். திறை செலுத்தாத வேந்தர்க்கு ஈயலை உவமை கூறலின், அவரது செல்வ வரண், அரிது முயன்றெடுத்த செம்புற்றை யொக்கு மென்றவாறாம். சுழற்சிப் பொருளதாகிய அலமரல் என்பது உலமரம் என வந்தது. 52. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆசிரியர் மருதன் இளநாகனார், பாண்டி வேந்தர்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையர். பாண்டி நாட்டு மக்கள் அயரும் விழாக்களையும் பாண்டி வேந்தருடைய போர்த் திறங்களையும் பலபடியாகப் புகழ்ந்து பாடும் பண்பினர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை இறைவனுடைய பிறைநுதல் விளங்கு மொருகண் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாற என்று பாராட்டுகின்றார். நண்ணார் அரண்தலை மதிலராகவும் முரசு கொண்டு, ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூடல் என்று கூடல் நகரையும், நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும், தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார், ஆனா விருப்போ டணியயர்ப காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு என அந்நகரவர் காமவேள் விழா வயர்தலும் பிறவும் கூறுகின்றார். இவரால் சிறுகுடி வாணனும், வேளிரும், நாஞ்சில் வள்ளுவனும் பிறரும் பாராட்டப்படுகின்றனர். அந்துவனார் முருகவேட்குரிய பரங்குன்றத்தைப் புகழ்ந்து பாடிய சிறப்பை இவர் வியந்து கூறுகின்றார். இவர் பாடியுள்ள பாட்டுக்கள் மிக்க இலக்கிய நலம் சிறந்தனவாகும். பாண்டி நாட்டுக்கு வடக்கிலுள்ள வேந்தர் இந்த மாறன் வழுதியின் போராண்மை கேட்டு அஞ்சும் திறத்தை இப்பாட்டின்கண் நயமுறக் கூறுகின்றார். இவர் பாடிய பாட்டுக்களை நோக்கின், இவர் பாண்டி நாட்டுத் திருச்செந்தூர்க் கருகில் பிறந்தவராகலாம் என்று நினைத்தற் கிடமுண்டாகிறது. மருதன் இளநாகனார் மதுரை மருதனிளநாகனார் என்றும் கூறப்படுவர். மருதம் பாடுதலில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன் என்பது. இரு திறனும் பொருந்த இவர் |