காவல் என்றது ஆகுபெயர். நாடனை: ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது.ஓவும் ஓரும் அசைநிலை. அருளாவது ஒன்றின் துயர் கண்டாற் காரணமின்றித் தோன்றும் இரக்கம். அன்பரது தன்னால் புரக்கப் படுவார்மேல் உளதாகிய காதல். இனி, ஓகாரத்தைப் பிரித்து வினாவாக்கிக் கோப்பெருஞ்சேர லிரும்பொறையைக் கண்டஞான்று நின்னுடம்பு பெறுவாயெனத் தம்முடம்பு பெற்றமை தோன்ற நீயோ வென வினாவினாராக்கி யுரைப்பாரு முளர்.
காவல் குழவி கொள்பவரின் ஓம்பென்றமையால் செவியறிவுறூஉவும்,அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங்கொள்பவரோ டொன்றா தென்றமையால் பொருண்மொழிக் காஞ்சியுமாயிற்று.
விளக்கம் : பல எருமைகட்கிடையே விரவி நின்று மேயும் பசுக்கூட்டம்போலக் கருங்கற்பாறைகட்கிடையே விரவி யானைக்கூட்டம் காணப்படுகிற தென்பதை, எருமை யன்ன கருங்கல் லிடைதோ, றானிற் பரக்கும் யானைய என்றார். இது வடிவுவமம். பரக்கும்-பரந்து சென்று மேயும். முன்பு-வலி. கான் அக நாடு-காட்டின் அகத்ததாகிய நாடு; காடு சூழ்ந்த நாடென்பதாம். கானக நாடனை நீயோ வென்பது, காட்டிற் குள்ளாகிய நாட்டினையுடையோன் நீதானோ வென்று பொருள் கொள்ளவும் இடந் தருதலின், ஓகாரத்தைப் பிரித்து நீ கானக நாடனையோ என வினாவினாராக்கி யுரைப்பாரு முளர் என்றுரைத்தார். கோப்பெருஞ் சேர லிரும்பொறையைக் காணில் உடம்பு பெறுவை யெனச் சான்றோர் தமக்குரைத்தவாறே, நரிவெரூஉத்தலையார் அவனைக் கண்டு தம்முடம்பைப் பெற்று அதனால் உண்டாகிய வியப்பால், சான்றோரால் உரைக்கப்பட்ட கானக நாடனாகிய கோப்பெருஞ் சேர லிரும்பொறை நீயோ என்றா ரெனப் பொருள்கொள்வாரு முண்டு என்பதாம். காவலென்னுந் தொழில் காக்கப்படுந் தேயத்துக்காயினமையின் ஆகுபெயர் என்றார். குழவி கொள்பவரின் என்புழிக் கொள்ளுதல் வளர்த்துக் கொள்ளுதல் இன்: உவமப்பொருட்டு.
இனி, இப்பாட்டை வாயுறைவாழ்த்தாகக் கொண்ட நச்சினார்க் கினியர் இதனுள் நிரயங் கொள்பவரோ டொன்றாது காவலை யோம்பென வேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி அவற் குறுதி பயத்தலின் வாயுறை வாழ்த்தாயிற் றென்றார்.
கானக நாடென்றது, காவலும் செல்வமும் உடைய நாடென்பது படநிற்றலின், அதற்கேற்ப ஆகலின் என்றவிடத்து இங்ஙனம் பகைவரானணுகப்படாத என்பது முதலிய சொற்களைப் பெய்து கூறினார். இவை இசை யெச்சம்.
6. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இப் பாண்டியன் யாகசாலைகள் பல நிறுவி யாகங்கள் செய்தவன் என இவன் பெயராலும் நெட்டிமையார் பாட்டாலும் அறியலாம். இவனை வாழ்த்தும் சான்றோர் பஃறுளியாற்று மணலினும் பல யாண்டு வாழ்க என வாழ்த்துதலால், இவன் குமரிக் கோடும் பஃறுளியாறும் கடல் கொள்ளப்படுதற்கு முன்பே நம் தமிழகத்தில் இருந்தவனென்பது பெறப்படுகிறது. இப்பாண்டியனைப் பாடும் காரிகிழார் காரியென்னும்
|