பக்கம் எண் :

14

    

செய்யும்  இவனது தோற்றச்  சிறப்பு. நரிவெரூஉத்தலையார் என்னும்
சான்றோர்க்குற்ற  மெய்வேறுபாடு  இவனது   காட்சியால்   நீங்கிப்
பண்டைய நலத்தை யடைந்தது என்று கூறுவர். பண்டைய நல்லுடம்பு
பெற்ற அச்சான்றோர் பாடியது இப்பாட்டு.

     இதன்கண்,  அவர்   கோப்பெருஞ்  சேர  லிரும்பொறையைக்
கண்டு  அவனது  தோற்றப்  பொலிவை  வியந்து தனக்குச் செய்தது
போலப்  பிறர்க்கும்  இன்பம்  செய்யும்   இயல்பு   குன்றாதிருப்பது
காரணமாக,  இத்தோற்றப்  பொலிவு  செல்வக்குறைவாலும்  சிற்றினச்
சேர்க்கையாலும்   மக்கள்பால்    அளியின்மையாலும்   குன்றுமென
நினைந்து, “பெரும,நீ  கானக  நாடனாதலால்,   செல்வக்குறைவிலை;
ஆதலால்,  நீ  நிரயங்கொள்ளும் சிற்றினத்தைச் சேராது நாட்டினைக்
குழவி    வளர்ப்பாரைப்    போலப்      பாதுகாப்பாயாக”   என
அறிவுறுத்துகின்றார்.

 எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
5. அருளும் அன்பும் நீக்கி நீங்கா
 

நிரயங் கொள்பவரோ டொன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. (5)

     திணை:பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ :  பொருண்
மொழிக்   காஞ்சியுமாம்.   சேரமான்  கருவூரேறிய  ஒள்வாட்
கோப்பெருஞ்   சேர லிரும்   பொறையைக்    கண்டஞான்று
நின்னுடம்பு   பெறுவாயாகென,  அவனைச்  சென்று   கண்டு
தம்முடம்பு  பெற்றுநின்ற  நரிவெரூ  உத்தலையார்   பாடியது.

     உரை: எருமையன்ன  கருங்கல் இடைதோறு - எருமை
போலும் வடிவையுடைய  கரிய  கற்பொருந்திய  இடந்தோறும்;
ஆனிற் பரக்கும் யானைய - பெற்றம்போலப் பரக்கும் யானையை
யுடையவாய;  முன்பின்  கான் அக நாடனை - வலியையுடைய
காட்டிற்குள்ளாகிய நாட்டினையுடையாய்; பெரும-; நீ ஆகலின்
- நீ இங்ஙனம் பகைவரான் அணுகப்படாத இயல்பாகிய பெருஞ்
செல்வத்தை யுடையனாதலால்; நின் ஒன்று மொழிவல் -நினக்கு
ஒரு காரியஞ் சொல்லுவேன் அதனைக் கேட்பாயாக;  அருளும்
அன்பும்   நீக்கி - அருளையும்  அன்பையும்  நீக்கி;  நீங்கா
நிரயங் கொள்பவரோடு ஒன்றாது - பாவஞ்செய்தாரை நீங்காத
நரகத்தைத்  தமக்கு  இடமாகக் கொள்பவரோடு பொருந்தாது;
காவல்  -  நீ  காக்கப்படும் தேயத்தை; குழவி கொள்பவரின்
ஓம்பு மதி -குழவியை வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக;
அளிது  அது -  அளிக்கத்தக்க  தொன்று அக்காவல்; பெறல்
அருங்குரைத்து - அது பெறுதற் கரிது; எ-று.