பக்கம் எண் :

152

அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
10.நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
15. நீனிற வுருவி னேமி யோனுமென்
றிருபெருந் தெய்வமு முடனின்றா அங்
குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
இன்னீ ராகலி னினியவு முளவோ
இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
20.ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவிரும்
உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே
அதனால், நல்ல போலவும் நயவ போலவும்
25.தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்கநும் வேலே கொடுவரிக்
30. கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே. (58)

     திணை: பாடாண்டிணை. துறை: உடனிலை. சோழன் குராப் பள்ளித்
துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத்
துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக்
காரிக்கண்ணனார் பாடியது.

     உரை: நீயே தண் புனல் காவிரிக் கிழவனை - நீ குளிர்ந்த
நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவனே - இவன்; முழு முதல்
தொலைந்த கோளி யாலத்துக் கொழு நிழல் நெடுஞ் சினை - பரிய
அடிமாய்ந்த கோளியாகிய ஆலத்துக் கொழுவிய நிழலையுடைய நெடிய
கொம்பை; வீழ் பொறுத் தாங்கு - அதன் வீழ் தாங்கினாற் போல;
தொல்லோர் மாய்ந் தென - தனக்கு முன்னுள்ளோர்; இறந்தாராக;
துளங்கல் செல்லாது - தான் தளராது; நல்லிசை முது குடி நடுக்கறத்
தழீஇ - நல்ல