பக்கம் எண் :

154

அலமரும் அயலாருடைய; பொது மொழி கொள்ளாது - சிறிப்பில்லாத
மொழியைக் கேளாது; இன்று போல்க நும் புணர்ச்சி - இன்று போல்க
நுமது கூட்டம்; வென்று வென்று அடு களத்து உயர்க நும் வேல் -
வென்று வென்று போர்க்களத்தின்கண் மேம்படுக நும்முடைய வேல்;
கொடு வரிக் கோண்மாக்குயின்ற - வளைந்த வரியை யுடைய புலி
வடிவாகச் செய்யப்பட்ட; சேண் விளங்கு தொடுபொறி - சேய்மைக்கண்
விளங்குகின்ற தோண்டிய இலாஞ்சனையை; நெடு நீர்க் கெண்டை யொடு
பொறித்த - பெரிய நீரின்கண் வாழும் கயலுடனே பொறித்த; குடுமிய
வாக - சிகரங்களை யுடையவாக; பிறர் குன்று கெழு நாடு - பிறருடைய
குன்றையுடைய நாடுகள் எ-று.

     குன்று கெழு நாடென்ற தாயினும் கருதியது பிறர் நாட்டுக் குன்றுக
ளென்றதாகக் கொள்க. கோளி யென்றது, பூவாது காய்க்கும் மரம். தழீஇப்
பொறாவென வியையும் முரச மூன்றாவன: வீர முரசும் நியாய முரசும் தியாக
முரசும்; மண முரசுடனே ஏனை யிரண்டு முரசென்பாரு முளர். தொடு பொறி,
பெயர்மாத்திரையாய் நின்றது. ஒருவீர் ஒருவீர்க்கு உதவியாய் வலியையுடையீராய்
நீங்கள் இருவீருமென்பாரு முளர்.

     இருவ ரரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இஃது உடனிலையாயிற்று.

விளக்கம்: ஆலமரத்தின் கிளையைத் தாங்குதற்குரிய வீழ் தோன்றித்
தாங்கத் தொடங்கிய வளவில் அதன் அடி முதல் புரை யோடித் தொலைந்து
போதலின், “முழுமுதல் தொலைந்த கோளி யால” மென்றார். துளங்கல்
செல்லாது. ஒரு சொல்லாய்த் துளங்கா தென்பது படநின்றது. உருமின்பால்
உள்ள அருமை யிது வென்றற்குப், “பொறுத்தற்கரிய” என்றார். “இளைய
தாயினும் கிளையரா வெறியும் உருமின்” என்ற உவமத்தால், பொருநரைப்
பொறாஅ என்றதற்கு, இளமைக்காலத்தும் பகைவரைக் காணப் பொறாத என்று
உரை கூறினார். நெல்லும் நீரும் பாண்டியர்க்கே யன்றி, ஏனைச் சோழ
சேரர்க்கும் எளியவாய்க் கிடைப்பது பற்றி, “எல்லார்க்கும் எளிய” என்றும்,
“வரைய சாந்தமும் திரைய முத்தமும்” பாண்டியர்க்கே யுரிய, ஏனையோர்க்கு
அரிய வென்றும் அறிக. உடனிலை, நட்பாற் கூடி யொன்றியிருக்கும் நிலை.
யாவராலும் நயக்கப்படுவது நடுவு நிலையாதலின், அதனை நயம் என்றும்
அதனைப் புலப்படுத்தும் மொழிகளை நயவ வென்றும் கூறுவர். காதல் நெஞ்சின்
நும் - காதல் நெஞ்சினையுடைய நுங்கள் என்க. தொடு பொறி - கல்லின்கண்
வெட்டப்படும் பொறி. இரண்டு முரசாவன வெற்றியும் கொடையுமாம். தொடு
பொறி, தொடராற்றலால் வேறு பொருள் பயவாமையின் “பெயர்மாத்திரையாய்
நின்ற” தென்றார்.