| | விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப் | 5 | பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே. (64) |
திணை: பாடாண்டிணை துறை: விறலியாற்றுப்படை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.
உரை: நல் யாழ் ஆகுளி பதலை யொடு சுருக்கி - நல்ல யாழையும் சிறு பறையையும் ஒரு தலை மாக்கிணையுடனே கட்டி; செல்லாமோ சில் வளை விறலி - போவே மல்லேமோ சொல்லுவாயாக சில வளையையுடையவிறலி; களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை - யானை யணிபொருத இடமகன்ற பாசறைக்கண்; விசும்பு ஆடு எருவை பசுந்தடி தடுப்ப - ஆகாயத்தின் கண்ணே பறக்கும் எருவையைப் பசிய வூன் தடி தகைப்ப; பகைப் புலம் மரீஇய - மாற்றார் தேயத்தின்கண்ணே மருவிய; தகைப் பெருஞ் சிறப்பின் குடுமிக் கோமான் கண்டு - அழகிய பெரிய செல்வத்தினையுடைய முதுகுடுமியாகிய கோமானைக் கண்டு; நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கு - மிக்க நீரான் அடப்பட்ட புற்கையைக் கைவிட்டு வருவதற்கு எ-று.
எருவை, தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருத்து; கழுகெனினு மமையும். விறலி, குடுமிக் கோமாற் கண்டு புற்கையை நீத்தனம் வரற்குச் செல்லாமோ வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
தகைப்பெருஞ் சிறப்பின் என்பதூஉம் பாடம்.
விளக்கம்:சுருக்குதல் - கட்டுதல்; பைக்குள்ளே வைத்து அதன் வாயைச் சுருக்கிக் கட்டுதல்பற்றி இவ்வாறு கூறினார். யானைகள் தம் மில் அணிவகுத்துச் செல்லும் இயல்பினவாதலால், களிற்றுக் கணம் என்றதற்கு யானை யணி யென உரை கூறினார். பசுந்தடியின் காட்சி எருவையை மேலே செல்லாவாறு தடுத்துத் தன்னை யுண்டற்குரிய வேட்கையை யெழுப்புதலின், அதன்மேலேற்றி, பசுந்தடி தடுப்ப என்றார். தகை அழகு. தகைப்பருஞ் சிறப்பின் என்ற பாடத்துக்குத் தடுத்தற் கரிய தலைமையையுடைய என உரை கூறிக் கொள்க.
|