| ஊர்களையுடைய; காமர் கிடக்கை - அழகிய கிடையையுடைய ; அவர் அகன்றலை நாடு - அவரது அகன்ற விடத்தையுடைய நாடு எ-று.
அன்னோ என்னவாதுகொல் என்று பாடமோதுவாரு முளர். நாடு தான் என்னாவதுகொல் எனக் கூட்டுக. நாடென்று மொருமை நோக்கி, என்னாவதுகொல் என ஒருமையாற் கூறப்பட்டது.
விளக்கம்: வெற்றியால் உளதாகும் புகழை விறற்புகழ்என்றார். அறப்போர் செய்தற்குரிய குணங்களால் அமைந்தோரைச் சான்றோர் என்பது மரபு; மெய் சிதைந்து சாந்தெழில் சிதைத்த சான்றோர் பெருமகன் (பதிற். 67) என்று பிறரும் கூறுதல் காண்க. மயிர்க்கண் முரசம் கொல்லேற்றுப் பைந்தோல், சீவாது போர்த்த மாக்கண் முரசம் (மதுரை.732-3) சீவுதல், மயிரை நீக்குதல். சீவாது போர்த்த முரசினை மயிர்க்கண் முரசம் என்றலை, தழங்கு குரல் மயிர்க்கண் முரசினோரும் (நற்.93) என்பதனாலு மறிக. முக்குதல், உண்ணுதல். தத்திங்கந் தத்திங்கம் கொட்டு வாளாம், தயிருஞ் சோறுந் தின்பாளாம், ஆப்பஞ் சுட்டால் தின்னு வாளாம், அவலிடிச்சால் முக்குவாளாம் என்று மகளிர் கைக்குழந்தைகட்குப் பாடிக் காட்டும் பாட்டிலும் முக்குதல் இப் பொருளில் வருதல் காண்க. 64. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதுகுடுமிப் பெருவழுதி புலவர் பாடும் புகழ் படைத்தவன். இவனது வண்மை புலவர் மிடி தீர்க்கும் பெருநலம் படைத்திருப்பதுபற்றி, வறுமை யெய்துங் காலங்களில் புலவர்கள் இவன்பால் பொருள் பெற்றுச் சென்று இனிது வாழ்வதனோ டமையாது, தாம் பெற்ற பெருவளத்தைப் பெறார்க்கும் அறிவித்து, அவன்பாற் சென்று அது பெறச் செய்வது மரபு. அம்முறையே, இப்பாட்டின்கண் ஆசிரியர் நெடும்பல்லியத்தனார், வறுமை யெய்தி வாடும் விறலியைக் கண்டு, இக் காலத்தே புற்கையுண்டு வருந்தும் நாம் முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு வருவேமாயின், புற்கை யுணவு நீங்கி இனிய வுணவு கொள்ளும் செல்வம் பெறலாம் வருக செல்வேம் என்று பாடியுள்ளார். நெடும்பல்லியத்தன் என்னும் பெயர். ஆண்பாற்கும் நெடும்பல்லியத்தை யென்பது பெண்பாற்கும் வழங்கும். இப்பாட்டின் முதலடியில் யாழ், ஆகுளி, பதலை யெனப் பல்லியங்களைத் தொகுத்தோதுதலின் இவர் நெடும்பல்லியத்தனா ராயினா ரெனக் கருதுவோரும் உளர். நெடும் பல்லியத்தை யென வருதலை நோக்கின் இக்கருத்துச் சிறப்புடையதாகத் தோன்றவில்லை. முதுகுடுமிப் பெருவழுதி தனக்குரிய கூடலினீங்கிப் போர்க்களத்தே அமர்ந்திருப்பதை யறிந்துவைத்தும் அங்கே அவன்பாற் செல்லக் கருதுவது அவனது வண்மையும் இவரது வறுமைக் கொடுமையும் புலப்படுத்துகிறது. இவரைப்பற்றி வேறே குறிப்பொன்றும் காணப்படவில்லை.
| நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை |
|