பக்கம் எண் :

169

66. சோழன் கரிகாற் பெருவளத்தான்

     சேரமான் பெருஞ்சேரலாதனோடு பொருது வெற்றிபெற்று மகிழ்ந்த
கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் என்னும் புலவர்
பெருமாட்டியார் கண்டார். அச் சேரமான் புறப்புண்ணாணிவாள்
வடக்கிருந்ததும், அது கண்டு, வீரராகிய சான்றோர் பலர் உயிர் துறந்ததும்
கேள்வியுற்றிருந்த அவர்க்கு, கரிகாலனது வன்மையும், சேரமானது
மானவுணர்வும் பெருவியப்பைப் பயந்தன. இதனினும் சிறப்புடைய பொருள்
தாம் பாடுதற் கில்லாமை தேர்ந்து இப்பாட்டின் கண் இதனைப் பொருளாக
அமைத்து, “களியியல் யானைக் கரிகால் வளவ, பல போர்களினும் பகைவரை
வென் றுயர்ந்த நின் ஆற்றல் மிக விளங்குமாறு பெருஞ்சேரலாதனை
வென்றனை; ஆயினும் வெண்ணிப் பறந்தலைக்கண் நின்னால் உண்டாகிய
புறப்புண்ணுக்கு நாணி வாள் வடக்கிருந்து இவ் வுலகத்தே புகழ் மிக எய்திய
சேரலாதன் நின்னினும் நல்ல னன்றே” என்று பாடியுள்ளார்.

வெண்ணி  யென்பது,  தஞ்சை   மாநாட்டில்   உள்ளதோர்  ஊர்.
இது வெண்ணில் என்றும்  வழங்கும். குயத்தியார்  என்பது  இப்புலவர்
பெருமாட்டியின் பெயர். வேட்கோவருள் சிறந்தோர்க்குப் பண்டை நாளில்
வேந்தர் குயம் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தல் மரபு. இவர் குயத்தியார்
எனப்படுதலால், வேட்கோவருள் சிறந்தவ ரென்பது துணிபாம். இம்மரபு
பத்தாம் நூற்றாண்டு வரையில் இருந்திருக்கிறது. கடலில் இயங்கும் காற்றைக்
கலஞ் செலுத்துதற்குப் பணி கொள்ளும் விரகினை முதன் முதலிற் கண்டவர்
பண்டைத் தமிழரே; உரோமானிய ரல்லர் என்பது இவர் பாட்டால்
வலிபெறுகிறது. கரிகாலன் முன் இவர் அவர்க்குத் தோற்ற,பெருஞ்சேர
லாதனைச் சிறப்பித்து, “வேந்தே, வெற்றிப் புகழ் ஒன்றே நீ பெற்றனை;
அதனை நினக்குத் தந்து, நின்னாலுண்டாகிய புறப்புண்ணுக்கு நாணி
வடக்கிருந்து பெறும் பெரும்புகழை அவன் எய்தினான்; அவன் நின்னினும்
நல்லன் போலும்” என நயம்படக் கூறுவது இவரது புலமை நலத்தைப்
புலப்படுத்துகிறது.

நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற
5 வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே. (66)

     திணை: வாகை துறை: அரசவாகை. சோழன் கரிகாற்
பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.

     உரை: நளி யிரு முந்நீர் நாவாய் ஓட்டி - நீர் செறிந்த பெரிய
கடலின்கண்ணே மரக்கலத்தை யோட்டி; வளி தொழிலாண்ட உரவோன்