| மருக - போர்செய்தற்குக் காற்றின்றி நாவாய் ஓடாதாக ஆண்டு வளிச் செல்வனை யழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபிலுள்ளானே; களியியல் யானைக் கரிகால் வளவ - மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவ; சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய் - மேற் சென்று போரை யெதிர்நின்று கொன்ற நினது வலி தோற்ற வென்றவனே; நின்னினும் நல்லன் அன்றே - நின்னினும் நல்லனல்லவே; கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை - தழைத்தலைக் கொண்ட புது வருவாயையுடைய வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்துப் போர்க்களத்தின் கண்; உலகம் புகழ் மிக எய்தி - உலகத்துப் புகழை மிகப்பொருந்தி; புறப் புண் ணாணி வடக்கிருந்தோன் - புறப் புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோன் அவ்வாறிருத்தலான் எ.று.
புகழெய்தி யென்றது, புறப்புண் நாணுதல்தன்னை. ஓட்டி யென்பதனை யோட்ட வெனத் திரிக்க. எய்தி, எய்த வெனத் திரிப்பினு மமையும். எய்தவென்று பாடமோதுவாரு முளர். உரவோன் மருக, கரிகால் வளவ, வென்றோய், வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி உலகத்துப் புகழ் மிக எய்தி வடக்கிருந்தோன், நின்னினும் நல்ல னன்றே யெனக் கூட்டுக. இது, கரிகால் வளவன் வென்றி கூறியதாகலின் அரசவாகை யாயிற்று.
விளக்கம்: ஆண்டில் குறிப்பிட்ட காலத்தில் வீசும் வணிகக் காற்றின் வரவறிந்து கலஞ் செலுத்துவது முறையென்ற செய்தி ஆராய்ச்சியால் விளங்காமுன் இவ்வுரை யெழுதப்பட்டதாகலின், உரைகாரர், வளிதொழி லாண்ட வுரவோன் என்றதற்குத் தம் காலத்து வழங்கிய புராண கதை யொன்றைப் பெய்து கூறுகின்றார். மார்புகுறித் தெறிந்த வேல் முதுகிடத்தே புண்ணாக்கியது கரிகாலனது ஆற்றல் தோற்றுவித்து நிற்றலின், ஆற்றல் தோன்ற வென்றோய் என்றார். வெண்ணிப் பறந்தலை - வெண்ணி யென்னும் ஊர்க்குப் புறத்தேயுள்ள போர்க்களம். ஊர்க்குப் புறத்தே அதனருகே யுளதாகிய போர்க்களம் இவ்வாறு கூறப்படும்; கூடற் பறந்தலை, பாழிப் பறந்தலை, வாகைப் பறந்தலையென வருதல் காண்க. புகழுடையார்க்கன்றிப் புறப்புண்ணுக்கு நாணு தலுண்டாகாதாகலின், நாணுதலையே புகழென்றார். ஆற்றல் தோன்ற வென்று கொண்ட நின் புகழினும், விழுப்புண் பட்டும் புறப்புண்ணாணியும் சேரமான் கொண்ட புகழ் போற்றத்தக்க தென்றற்கு, நின்னினும் நல்ல னன்றே என்றார்.
|