பக்கம் எண் :

197

கொண்டியும் பெரிது - கொள்ளையும் பெரிது; என எள்ளி வந்த
வம்ப மள்ளர் - என இகழ்ந்து வந்த நிலையில்லாத வீரர்; புல்லென்
கண்ணர் புறத்திற் பெயர - புற்கென்ற கண்ணராய் நின்றவிடத்து
நில்லாதே புறத்தே போக; அவர் ஈண்டு அடுதலும் ஒல்லான் - அவரை
இப் போர்க்களத்தின் கண்ணே கொன்றிடுதலும் உடன்படானாய்;
ஆண்டு - அவ்விடத்து; அவர் மாணிழை மகளிர் நாணினர் கழிய -
அவர் மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய மகளிர் நாணினராய்
இறந்துபட; தந்தை தம்மூர் ஆங்கண் - தந்தையருடையவாகிய தங்கள்
ஊரிடத்து; தெண் கிணை கறங்கச் சென்று - தெளிந்த போர்ப்பறை
யொலிப்பச் சென்று; ஆண்டு அட்டனன் - அவ்விடத்தே கொன்றான்
எ-று.

     தந்தை தம்மூ ரென்றதனை, “ஏவ லிளையர் தாய்வயிறு கறிப்ப”
என்றாற்போலக் கொள்க. தந்தை தம்மூ ரென்றது, தாம் தோற்றிச் செய்த
நகரியன்றி உறையூரும் கருவூரும் முதலாகிய ஊர்களை.

விளக்கம்: தாளில் அணிந்த வீரகண்டை இடையே தொடுக்கப் பட்ட
சந்துகளையுடையதாகலின், தொடை யென்றும், அதுதான் வளைவுடையதாதல்
பற்றி, “வணங்குதொடை” யென்றும் கூறினார். முணங்கு நிமிர்தல் - மூரி
நிமிர்தல்; அஃதாவது தூங்கி யெழுந்தவுடன் கைகளையும் உடம்பையும் நீட்டித்
திமிர்விட்டுச் சோம்பலைப் போக்குதல். முன்பும், “முணங்கு நிமிர் வயமான்”
(புறம்.52) என்றது காண்க. மலைத்தல் - மாறுபட்டுப் பொருதல். ஆண்மையால்
உளதாகும் சிறப்பினை யுடைமை தோன்ற, “விழுமியம்” என்றார். வம்ப -
மள்ளர் - புதியராய் வரும் வீரர்; முன்பு வந்தோர் தோல்வியுற் றொழிதலின்
புதியர் புதியராய் வந்து நீங்குதலின், “நிலையில்லாத வீரர்‘ என்றுரைத்தார்.
தோல்வியால் உளம் மழுங்கி ஒளியிழந்த கண்ணராதலின், “புல்லென்
கண்ணர்” என்றார். அவ்விடத் தென்புழி, அகரச் சுட்டுப் பின்னர் வரும்
தந்தை தம் மூரைக் குறிக்கும். இளையர் பலராயினும், ஒவ்வொருவரையும்
பெற்ற தாய் ஒருத்தி யாதலால் தாயென்றாற் போல, ஊர் ஒருமையாற்
கூறப்பட்டது.

79. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன்

     தலையாலங்கானத்துச் செருவின்கண் பாண்டியன் நெடுஞ்செழிய னுடைய
வீரர்கள், பகைவர் படையை யழித்து வருகையில், பகற்போது கழியலுற்றது.
ஞாயிறு மறைதற்குச் சில நாழிகைக்கு முன்பே செழியன் செருக்களம் நோக்கி
வந்தான். வந்தவன், காலைப்போதில் மூதூரிலுள்ள கயத்தில் மூழ்கி நீராடி
வேம்பின் மாலை சூடிப் போர்க்குத் தெண்கிணை முன்பாகக் கறங்கிச் செல்ல,
பின்னே பெரும் களிறொன்று நடந்து வருவது போலப் பெருமிதத்துடன்
போர்க்களத்திற்கு வந்தான். பொர நிற்கும் வீரரும் பலராயிருந்தனர். இக்
காட்சியைக் கண்ட இடைக்குன்றூர் கிழார்