78. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போரெதிர்ந்த பகைவேந்தர் எழுவர் மேற்கொண்டு போந்த கொள்கை சீரிதன்மையால் அவர் கெட்டனர் என்பார் போல இப் பாட்டின்கண் இடைக்குன்றூர் கிழார், எம் இறைவனான நெடுஞ்செழியனது மலைத்தற்கரிய மார்பினை மதியாது யாமே விழுமியம், பெரியம்; நம்மொடு பொரும் இவனும் இளையன், கொள்ளத்தக்க கொள்ளையும் பெரிது, என இகழ்ந்த கருத்துடன் வந்தனர்; அவர் புறங்கொடுத் தோடுமாறு வென்றதனோடமையாத எங்கள் இறைவனான செழியன் அவர்தம் மகளிர் நாணமுற்று உயிர் விடுமாறு அவர்கட்குத் தொன்றுதொட்டுரியவாகிய ஊர்கட்கும் சென்று ஆங்கே அவ் வேந்தர்களைக் கொன்றழித்தான் என்று பாடிக் காட்டுகின்றார்.
| வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள் அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து | 5. | விழுமியம் பெரியம் யாமே நம்மிற் | | பொருநனு மிளையன் கொண்டியும் பெரிதென எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர் புறத்திற் பெயர ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர் | 10. | மாணிழை மகளிர் நாணினர் கழியத் | | தந்தை தம்மூ ராங்கண் தெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே. (78) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன்றாள் - வளைந்த சந்துகளாற் பொலிந்த வலி பொருந்திய போரின் கண் நிலை தளராத பொறையினையுடைய தாளினையும்; அணங்கருங் கடுந் திறல் - வருத்துதற்கரிய மிக்க வலியையுமுடைய; என்னை - என் இறைவன்; அளைச் செறி உழுவை இரைக்கு முணங்கு நிமிர்ந்து வந்தன்ன - முழையின்கட் கிடந்த புலி தான் விரும்பியதோர் இரையை நோக்கி மூரிநிமிர்ந்து வந்தாற்போன்ற; மலைப்பரும் அகலம் - மாறுபடுதற்கரிய மார்பத்தை; மதியார் சிலைத்து எழுந்து - மதியாராய் ஆர்த்து எழுந்திருந்து; விழுமியம் பெரியம் யாம் - சிறப்புடையேம் படையாற் பெரியேம் யாங்கள்; நம்மிற் பொருநனும் இளையன் - நம்மிற் பொருவானும் இளையன்; |