| நெடிய கொடியாகிய உழிஞைக் கொடியோடு சூடி; குறுந் தொடி கழித்த கை சாபம் பற்றி - குறிய வளைகளை யொழிக்கப்பட்ட கையின்கண்ணே வில்லைப் பிடித்து; நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் - நெடிய தேரினது மொட்டுப் பொலிவுபெற நின்றவன்; யார் கொல் - யாரோதான்; அவன் கண்ணி வாழ்க - யாரே யாயினும் அவன் கண்ணி வாழ்வதாக; தார் பூண்டு தாலி களைந் தன்றும் இலன் - தாரை யணிந்து ஐம்படைத்தாலி கழித்தலும் இலன்; பால்விட்டு அயினியும் இன்று அயின்றனன் - பாலை யொழித்து உணவும் இன்றுண்டான்; வயின் வயின் - முறை முறையாக; உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை - வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை; வியந்தன்றும் இழிந்தன்றும் இலன் - மதித்தலும் அவமதித்தலும் இலன்; அவரை அழுந்தப் பற்றி - அவரை இறுகப் பிடித்து; அகல் விசும்பு ஆர்ப்பு எழ - பரந்த ஆகாயத்தின் கண்ணே ஒலி யெழ; கவிழ்ந்து நிலஞ் சேர அட்டதை - கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணே பொருந்தக் கொன்றதற்கு; மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் - இலன் மகிழ்ந்ததுவும் இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் அதனினும் இலன் எ-று.
யார் கொல் என்றது வியப்பின்கட் குறிப்பு இழித்தன் றென்பது இழிந்தன்றென மெலிந்து நின்றது.
விளக்கம்: இளஞ் சிறார்க்குக் காலிற் கிண்கிணியும், தலையிற் குடுமியும்,கையில் குறிய வளையும், மார்பில் ஐம்படைத் தாலியும் அணிவதும், பாலுணவளிப்பதும் பண்டைத் தமிழ்ச் செல்வர் மரபு. இளமை கழிந்து காளைப் பருவ மெய்தினார் காலிற் கழலும் தோளில் தொடியும் மார்பில் மாலையும் அணிவர்; சோற்றுணவு உண்பர். ஈண்டு நெடுஞ்செழியன் இளமைச் செவ்வியை இன்னும் நன்கு கழிந்திலன் என்றற்கு இவற்றை விரித்துக் கூறினார். கொடுஞ்சி தேர்த்தட்டின் நடுவே மொட்டுப்போ லமைத்த இடம்; அது மொட்டென்றும் கூறப்படும். அது கொடுஞ்சி யெனப்பட்டது. தன்னொடு பொர வருவாருள் தக்கோரை மதிப்பதும், தகவிலாரை அவமதிப்பதும் செய்தல் மறவர்க்கும் இயல்பு; அவ்வியல்பும் இவன்பால் காணப்படவில்லை; மேல்வரும் வீரரைக் கொன்று வீழ்த்துமிடத்து எய்தும் வெற்றியால் மகிழ்தலும் இயல்பு; அது தானும் இவனிடம் இல்லை. இவற்றைக் கண்டதால் வியந்து, யார் கொல் என்றார்.
|