| உரித்தாக வேண்டுவிராயின்; சென்று அவற்குத் திறை இறுக்கல் வேண்டும் - போய் அவனுக்குத் திறை கொடுத்தல் வேண்டும்; மறுப்பின் - கொடீராயின்; ஒல்வான் அல்லன் வெல் போரான் என - அதற்குடம்படுவா னல்லன் வெல்லும் பூசலையுடையான் என்று; சொல்லவும் தேறீராயின் - யான் சொல்லவும் தெளியீராயின்; மெல்லியல் கழல் கனி வகுத்த - நுமக்கு மெல்லிய தன்மையையும் கழல் மணியினது கனியால் கூறுபடுத்துச் சுருட்டப்பட்ட; துணைச் சில் ஓதி - இனமாகிய சிலவாகிய பனிச்சையையும்; குறுந்தொடி மகளிர் - குறிய வளையையுமுடைய உரிமை மகளிரது; தோள் விடல் இறும்பூ தன்று - தோளைப் பிரிந்துறைதல் வியப்பன்று; அஃது அறிந்து ஆடுமின் - அதனை யறிந்து போர் செய்ம்மின் எ-று.
அறிந்தாடுமின் என்ற கருத்து, அறியிற்போர் செய்தல் அரிதென்பதாம்.குறும்பு, சிற்றரண். கடற் றானையினையும் பொலந்தும்பை யினையுமுடைய அவன் றானு மென்க.
விளக்கம்: உரைஇ - உலாவி ஒன்றார் தேயப்பூ மலைந் துரைஇ (பதிற்.40) என்றாற்போல. கதுவாய் போய் - மிகவும் வடுப்பட்டு. நைத்தல் - அழித்தல்; நைவித்தல் என வந்ததெனினுமாம். உள்ளே புழையுண்டாகச் செய்து அதன்கண்ணே காம்பைச் செருகி ஆணியிட்டு முடுக்கி வைத்தல் இயல்பு. குழூஉக்களிற்றுக் குறும்பு - குழுமியிருக்கும் யானைத்திரள் அரண் போறலின், களிற்றுக் குறும்பெனப்பட்டது. தொடி, ஈண்டுக் கிம்புரி மேற்று. தார்: ஆகுபெயரால் மார்பைக் குறித்தது. அசைவு - வருத்தம். நிலம் திரைக்கும் கடல் தானை - நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்கிக் கொள்ளும் கடல் போலும் தானை. கழல் பாண்டில் கணை - கழல் வடிவாகவும் பாண்டில் வடிவாகவும் வாயமைக்கப்பட்ட அம்பு. பரிசை - கேடயம். பிணிக் கதிர் - ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் கதிர்கள். செம்மல் - தலைமை. மறுப்பாவது - கொடாமையாதலின், மறுப்பின் என்பதற்குக் கொடீராயின் என்றார். பனிச்சை - தலைமயிரை முடிக்கும் ஐவகையுள் ஒன்று. தோள் விடல் - தோளைப் பிரிந்துறைதல். எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார். (தொல். பொ. கற்பு: 34) என்பவாகலின், போரிடத்தே மகளிரைப் பிரிந்து போந்து நெடிது தங்கி உயிரிழப்பது உறுதியாதல் குறித்துத் தோள் விடல் என்றா ரென்றுமாம்.
98. அதியமான் நெடுமான் அஞ்சி
தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்த அதியமானுக்கும் கோவலூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்த மலாடர் வேந்தனுக்கும் பகைமையுண்டாயிற்று. பகைமை முதிரவே அதியமான் பெரும் படையுடன் கோவலூரை நோக்கிச் செல்லத் தலைப்பட்டான். இடைநிலத்து வாழ்ந்து வந்த சிற்றரசர் அதியமான் படையினைக் கண்டு அஞ்சி அலமரலாயினர். ஒளவையார், இந்நிகழ்ச்சிகளைக்கண்டு, இனி இவனுடன் போரெதிர்ந்து நிற்கும் வேந்தரதுநாடு என்னாகுமோ?என்று நினைந்து இப்பாட்டின் கண்,
|