வேந்தே, நின் யானைப்படை செல்லக் கண்ட வேந்தர் தத்தம் மதில் வாயில்கட்குப் பழைய கதவுகளை மாற்றிப் புதுக் கதவுகளை நிறுத்திப் புதிய கணைய மரங்களை யமைக்கின்றனர்; குதிரைப் படையைக் கண்டவர் காவற்காட்டின் வாயில்களைக் கவைத்த வேல் முட்களைப் பெய்து அடைக்கின்றனர்; வேற்படை கண்டவர் தம் கேடகங்கட்குப் புதிய காம்பும் கைந்நீட்டும் செறிக்கின்றனர்; மறவரது பெரும் படை கண்டவர் தம்தம் தூணிகளில் அம்பை யடக்கிக் கொள்கின்றனர்; நீயோ கூற்றத்தனையை; இனி நின் பகைவரது வயல் வளம் சிறந்த நாடு அவர் மனம் வருந்தி யிரங்குமாறு கெடுவது திண்ணம்என இவன் படைச் சிறப்பும் பகைவர் நாட்டழிவு குறித்த இரக்கமும் தோன்றப் பாடியுள்ளார்.
| முனைத்தெவ்வர் முரணவியப் பொரக்குறுகிய நுதிமருப்பினின் இனக்களிறு செலக்கண்டவர் மதிற்கதவ மெழுச்செல்லவும் | 5 | பிணனழுங்கக் களனுழக்கிச் | | செலவசைஇய மறுக்குளம்பினின் இனநன்மாச் செலக்கண்டவர் கவைமுள்ளிற் புழையடைப்பவும் மார்புறச் சேர்ந்தொல்காத் | 10 | தோல்செறிப்பினின் வேல்கண்டவர் | | தோல்கழியொடு பிடி செறிப்பவும் வாள்வாய்த்த வடுப்பரந்தநின் மறமைந்தர் மைந்துகண்டவர் புண்படுகுருதி யம்பொடுக்கவும் | 15 | நீயே, ஐயவி புகைப்பவுந் தாங்கா தொய்யென | | உறுமுறை மரபிற் புறநின் றுய்க்கும் கூற்றத் தனையை யாகலிற் போற்றார் இரங்க விளிவது கொல்லோ வரம்பணைந் திறங்குகதி ரலம்வரு கழனிப் | 20 | பெரும்புனற் படப்பையவ ரகன்றலை நாடே. (98) |
திணை: வாகை. துறை: அரசவாகை. திணை வஞ்சியும், துறை: கொற்றவள்ளையுமாம். அவனை அவர் பாடியது.
உரை: முனைத் தெவ்வர் முரண் அவிய - போர் முனைக் கண் பகைவரது மாறுபாடு அடங்க; பொரக்குறுகிய நுதி மருப்பின் நின் இனக் களிறு - பொருதலால் தேய்ந்து குறைந்த நுனையுடைத்தாகிய கோட்டையுடைய நினது இனமாகிய யானை; செலக் கண்டவர் - போகக் கண்ட பகைவர்; மதிற் கதவம் எழுச் செல்லவும் - தமது மதில்வாயிற் |