| நீங்காது சினம் ஆதலால்; அன்னோ - ஐயோ; உய்ந்தனர் அல்லர் - பிழைத்தாரல்லர்; இவன் உடற்றியோர் - இவனைச் சினப்பித்தவர்கள்; செறுவர் நோக்கிய கண் - பகைவரை வெகுண்டு பார்த்த கண்; தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனா - தன்னுடைய புல்வனைப் பார்த்தும் சிவப்பமையா வாயின எ-று.
காலன புனைகழ லென்பது, வீரத்திற்கும் வென்றிக்கும் கட்டின; போர்த்தோறும் வென்றுகட்டின வெனவுமாம். உம்மை: சிறப்பு. தோட்டையும் மலரையும் வேங்கையொடு விரைஇச் சூடிச் செறுவர் நோக்கிய கண் சிறுவனை நோக்கியும் சிவப்பானா; ஆதலால், அன்னோ, இவனுடற்றியோர் உய்ந்தன ரல்லரெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வட்கா ரென்பது வட்கரெனக் குறுகிநின்றது; வட்கர் - குற்ற மெனினுமமையும்.
விளக்கம்: நன்கு ஆறாத புண், பசும் புண் என்றும் ஈரம் புலராத பசும் புண் என்றும் கூறப்பட்டது. சுரிதல் - சுருளுதல். வரி வயம் - வரிகளையுடைய புலி. போர்க்கோலம் கண்டு கூறுதலின், உய்ந்தனரல்லர் இவன் உடற்றியோர்என்றார். சிறுவரைக் காணின் செறுநரும் விழைவர்; இவன் மறம் அவரினும் மிக்க தென்பார், சிறுவனை நோக்கியும் சிவப்பானாவென்றார்; செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர் (அகம்:66) எனப் பிறரும் கூறுதல் காண்க.
101. அதியமான் நெடுமான் அஞ்சி
ஒருகால், ஒளவையார் அதியமானிடம் பரிசில் வேண்டிப் பாடிச் சென்றார். அவன் அவர்பால் மிக்க விருப்பும் மதிப்பு முடையனாதலால் விரும்பியவுடனே அவர்க்கு அதனை நல்காது சிறிது தாழ்த்தனன். ஆகவே, அவர்க்கு நெஞ்சில் வருத்தம் சிறிது தோன்றிற்று. ஆயினும். அவர் அவனது மனப்பண்பை நன்கறிந்திருத்தலின் நெஞ்சிற்குக் கூறுவாராய், நெஞ்சே! வருந்த வேண்டா; அதியமானது பரிசிலைப் பெறும் காலம் நீட்டினும் நீட்டியாதாயினும், யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல நம் கையகத்ததென்றே கொள்; இது பொய்யாகாதுஎனத் தெருட்டும் கருத்தால் இப்பாட்டைப் பாடியிருக்கிறார்.
| ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ அணிபூ ணணிந்த யானை யியறேர் | 5 | அதியமான் பரிசில் பெறூஉங் காலம் | | நீட்டினு நீட்டா தாயினும் யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யா காதே அருந்தே மாந்த நெஞ்சம் | 10 | வருந்த வேண்டா வாழ்கவன் றாளே. (101) |
|