மூன்று திறத்தீரும் கூடிப் பொருதீ ராயினும்; பறம்பு கொளற்கு அரிது - பறம்பு கொள்ளுதற்கு அரிது; முந்நூறு ஊர்த்து தண் பறம்பு நன்னாடு - முந்நூறு ஊரை யுடைத்து குளிர்ந்த நல்ல பறம்பு நாடு; அம் முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்-; நீர் பாடினிர் செலின் - நீயிர் பாடினிராய் வரின்; யாமும் பாரியும் உளம் - நுமக்கு யாமும் பாரியும் உள்ளேம்; குன்றும் உண்டு - அதுவேயன்றி மலையும் உண்டு எ-று.
நீர் பாடி வரினும் பறம்பு நாடு பரிசிலர் முன்னே பெற்றமையின், அது நுமக்குக் கிடையாதென்பது கருத்தாகக் கொள்க.
விளக்கம்: நாடு வேண்டிப் பொருவதிற் பயனில்லை; அந்நாட்டு ஊர் முந்நூரும் பரிசிலர்க் குரியவாய்விட்டன; எஞ்சி நிற்பது குன்றமொன்றே; அதனை நும்மூர்க்குக் கொண்டு செல்ல முடியாது. வேள் பாரியோடு யானும் என்போலும் புலவர்களுமே நும்மாற் கொண்டு செல்லத்தக்க நிலையில் உள்ளோம். எம்மால் நுமக்காவதோர் செயலுமில்லை; ஆதலால், நீவிர் மீண்டு செல்வதே தக்கது என்று இகழ்ந்து கூறியதுமாம். இரவலரைப் புரக்கும் இயல்பினராகிய மூவேந்தரும் இழிந்த செயலாகிய இரவலர் செயலைச் செய்ய விரும்பாரெனக் கபிலர் எண்ணி ஏமாற்றமடைகின்றார். கபிலர் கூறியது போலவோ, அது போல்வதொரு சூழ்ச்சியினையோ அவர்கள் செய்து பாரியைக் கொன்றனர் என்ப. 111. வேள் பாரி
இப் பாட்டின்கண் கபிலர், மூவேந்தரையும் நோக்கிப் பாரியின் தோளாண்மையைப் புகழ்ந்து, நுமக்கு இப்பறம்பு கொள்ளற் கரிது என்றவர், அவ்வியப்பு நீங்கா வுள்ளத்தோடு அப்பறம்பு மலையை நோக்கி, பறம்பு மலையே, நீ பாரியாற் காக்கப்படுதலால் நின்னை வேல் கொண்டு வென்று கைப்படுத்தல் வேந்தர்கட்கு அரிதே; ஆயினும் கிணை கொண்டு பாடும் விறலி யொருத்தி வேந்தாகிய பாரியைப் பாடி வருவாளாயின் அவள் கொள்ளுதற்கு எளியையாய் உள்ளாய்என்று கூறுகின்றார்.
அளிதோ தானே பேரிருங் குன்றே வேலின் வேறல் வேந்தர்க்கோ வரிதே நீலத், திணைமலர் புரையு முண்கட் கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே. (111) |
திணையுந் துறையு மவை; அவனை அவர் பாடியது.
உரை; அளிது பேரிருங் குன்று - இரங்கத்தக்கது பெரிய கரிய குன்றம்; வேலின் வேந்தர்க்கோ அரிது - அது வேலான் வெல்லுதல் வேந்தர்க்கோ அரிது; நீலத்து இணை மலர் புரையும் - நீலத்தினது இணைந்த மலரை யொக்கும்; உண்கண் கிணைமகட்கு - மையுண்ட கண்ணையுடைய |