| 118. வேள் பாரி
இப் பாட்டின்கண் சான்றோராகிய கபிலர் பறம்பு நாட்டு வழியே வருபவர், அதன் அழிவு கண்டு, அறைகளையும் பொறைகளையும் இடையிடையே அமைய இணைத்தமைத்த கரையையுடைய சிறு குளம் மிக்க நீர் நிரம்பிப் பாதுகாப்பார் இன்மையின், கரையுடைந்து வீற்று வீற்றோடி யழிவதுபோல் பல்வகைக் குடிகள் நிறைந்து பாரியாற் காக்கப்பட்டிருந்த பறம்பு நாடு, அவன் இறந்ததும் கெட்டழிந்து போயிற்றே என வருந்திப் பாடியுள்ளார்.
| அறையும் பொறையு மணந்த தலைய எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரைத் தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ கூர்வேற் குவைஇய மொய்ம்பிற் | 5 | றேர்வண் பாரி தண்பறம்பு நாடே. (118) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: அறையும் பொறையும் மணந்த தலைய - பாறையும் சிறு குவடும் கூடிய தலையை யுடையவாகிய; எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரை - எட்டாம் பக்கத்துப் பிறைபோலும் வளைந்த கரையை யுடைத்தாகிய; தெண்ணீர்ச் சிறு குளம் கீள்வது - தெளிந்த நீரையுடைய சிறிய குளம் பாதுகாப்பாரின்மையின் உடைவது போலும்; கூர் வேல் குவைஇய மொய்ம்பின் - கூரிய வேலையேந்திய திரண்ட தோளையுடைய; தேர் வண் பாரி தேர் வண்மையைச் செய்யும் பாரியது; தண் பறம்பு நாடு - குளிர்ந்த பறம்பு நாடு எ-று.
நாடு குளங் கீள்வதென இடத்து நிகழ் பொருளின்றொழில் இடத்து மேலேறி நின்றது. மாதோ: அசைநிலை.
விளக்கம்: அறைகளையும் பொறைகளையும் இடையிடையே கரையாக அமையுமாறு பிறை வடிவில் ஏரிகட்குக் கரையமைக்கும் முறை பண்டுதொட்டே வருவதென்பது இதனாலும், மலைநாட்டு ஏரிகளைக் கண்டும் அறியலாம். அறை - பாறை. பொறை - சிறுகுவடு. சிறு குளம் என்றாராகலின், அதற்கேற்பக் கரையைப் பாதுகாப்பார் இன்மையின் என்றார். உள்வழி, கரை கீள்வதற் கிடந்தாராரென வறிக. சிறு குளங்கள் நீர் நிரம்புங்காலத்து அதன் கரைகளைக் காவலர் இருந்து காக்கும் மரபு இன்றும் உண்டு. பண்டும் உண்டென்பதை, சிறுகோட்டுப் பெருங்குளங் காவலன் போல, அருங்கடி யன்னையுந் துயில்மறந்தனளே (அகம். 252) என்று சான்றோர் கூறுதல் காண்க. |