| பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை வெப்புள் என வெம்மைக்கு அதுவும் ஒரு வாய்பாடாய் நின்றது. வெம்மை உள்ளும் முதிர்ந்த வெனினு மமையும்.
விளக்கம்: பல சால்பட வுழுதலால் நல்ல புழுதி தோன்றி எரு வேண்டாதே மிக்க பயனை விளைவிக்குமாதலின், பூழி மயங்கப் பலவுழுது என்றார்; தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும், வேண்டாது சாலப்படும் (குறள். உழவு-7) என்பர் திருவள்ளுவர். வரகுக் கொல்லைகளில் உண்டாகும் ஒருவகைக் களையைப் பல்லி யென்றே இக்காலத்தும் வழங்குகின்றனர். அது வரகுபோலவே இருப்பினும் பல் போலும் வெள்ளிய பூக்களையுடையதாகும். அவரையின் உள்ளிருக்கும் பரலை ஈண்டுக் கடலை யென்றார். தாலம் பூசல், அகன்ற கலமாகிய தாலத்தே சோற்றை வாங்கிப் பிசைந்துண்டல். புலவரது புல வெல்லையைக் கடந்த புகழுடையனாகலின், பாரியின் புகழ்க்குரிய பண்புகளை, புலவர் பாடியானாப் பண்பு என்றார். பகைவர் புறந்தந் தோடு மிடத்து, அவரது கம்பலை கண்டு, இத்தகைய மறமானமில்லாத மள்ளரொடு பொருதல் தன் மறமாண்புக் கிழுக்காதலின், பாரி நாணமுற்று, அவர் பின்னே செல்வ திலனாகலின், கம்பலை கண்ட செருவெஞ்சேய் என்றதற்கு, ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டு நின்ற செரு வெஞ்சேய் என்று உரை கூறினார். பெருந்தோளென்றது, அடையடுத்துநின்ற சினையிற் கூறும் முதலறி கிளவி; அற்றாயினும் உரைகாரர், தொடர்மொழியாகக் கொண்டு, பெருந்தோளையுடையாளென விரித்தலின், பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை யென்றார்.
121. மலையமான் திருமுடிக்காரி
திருக்கோவலூர்க்கு மேற்கே பெண்ணையாற்றின் தென்கரைப் பகுதியும் தென்பகுதியும் பண்டை நாளில் மலாடு என்ற பெயரால் வழங்கப்பெற்று வந்தது. அதற்குக் கோவலூரே தலைநகர். கபிலர் காலத்தே அக் கோவலூரிலிருந்து ஆட்சிபுரிந்த வேந்தன் திருமுடிக்காரி யென்பான். இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். இவனது குதிரைக்கும் இவன் தன் பெயரே வைத்துப் பேணினன். இதனை காரிக் குதிரைக் காரி (சிறுபாண். 110) என்றும், காரியூர்ந்து பேரமர் கடந்த மாரியீகை மலையன் (புற. 158) (110, 111) என்றும் சான்றோர் கூறுவர். இதனால் பண்டை நாளைத் தலைமக்கள் தம் பெயரையே தாம் இவர்ந்து பொரும் குதிரைக்கும் இட்டுப் போற்றுவ ரென்பதும் விளக்கமுறுகிறது. செங்கைமாவின் தெற்கே பெண்ணையாற்றின் தென்மேற்கிலுள்ள முள்ளூர் இக் காரிக் குரியதாய் மிக்க பாதுகாப்புடன் விளங்கிற்று. ஒரு கால் அதனைக் கைப்பற்றக் கருதி வடநாட்டு ஆரிய மன்னர் பெரிய வேற்படையொடு போந்து முற்றிகையிட்டனர். அதனை யறிந்த காரி, கோவலூரினின்றும் சென்று தன் வேற்படை கொண்டு தாக்கினானாக; அவ் வாரியர் கூட்டம் அரியேற்றின் முன் நரிக் கூட்டமென அஞ்சி நடுங்கி யோடிவிட்டன ரென்பார், ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப், பலருடன் கழித்த வொள்வாள் மலையன, தொருவேற் கோடி யாங்கு (நற். 170) என்று சான்றோர் கூறியுள்ளனர். இவன் புலவர் பாணர் முதலிய இரவலர் பலர்க்கும் களிறும் தேரும் பல நல்கிப் பெரும் புகழ் விளைத்தான். |