| இவனைக் காரி யென்றும், மலையமான் என்றும் கோவற்கோமான் என்றும் கூறுவர். துஞ்சா முழவிற் கோவற்கோமான், நெடுந்தேர்க் காரி (அகம்.35) யென்றும், முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன் (குறுந்.312) என்றும் கூறுதல் காண்க. இத்துணைப் புகழ் படைத்த மலையன் தமிழ் வேந்தர் மூவர்பாலும் ஒத்த நட்புக்கடம் பூண்டு அவரவர்க்கும் வேண்டுங்கால் உதவிபுரிந்துள்ளான். கபிலர்பாலும் பேரன்புடையன். இவனது கோவலூரில் வாழ்ந்த பார்ப்பாரிடத்திற்றான் கபிலர் பாரி மகளிரை அடைக்கலப்படுத்திருந்தார்.
ஒருகால் கபிலர், திருமுடிக்காரியைக் காணச் சென்றார். மூவேந்தரையும் ஒப்பக் கருதும் கருத்தால் அவன் ஏனைப் புலவரோடொப்பக் கபிலரையும் கருதி வேண்டும் சிறப்பினைச் செய்தான். அக்காலை அவர், வேந்தே, யாவர்க்கும் ஈதல் எளிது; ஆயினும், ஈத்தது கொள்ளும் பரிசிலரது வரிசை யறிதலேயரிது. ஆதலால், புலவர்பால் வரிசை நோக்காது பொதுவாக நோக்குதலை யொழிக என இப் பாட்டின் கண் வற்புறுத்துகின்றார்.
| ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ வரிதே பெரிதும் ஈத லெளிதே மாவண் டோன்றல் | 5 | அதுநற் கறிந்தனை யாயிற் | | பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே. (121) |
திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி. மலையமான் திருமுடிக் காரியைக் கபிலர் பாடியது.
உரை: ஒரு திசை ஒருவனை உள்ளி - ஒரு திசைக்கண் வள்ளியோனாகிய ஒருவனை நினைந்து; நாற்றிசைப் பரிசில் மாக்கள் பலரும் வருவர் - நான்கு திசையினுமுள்ள பரிசின் மாக்கள் பலரும் வருவர்; அறிதல் அரிது - அவர் வரிசை யறிதல் அரிது; ஈதல் பெரிதும் எளிது; கொடுத்தல் மிகவும் எளிது; மா வண் தோன்றல் - பெரிய வண்மையையுடைய தலைவ; அது நற்கு அறிந்தனை யாயின் - நீ அவ் வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின்; புலவர்மாட்டு பொதுநோக்கு ஒழிமதி - அறிவுடையோரிடத்து வரிசை கருதாது ஒருதரமாகப் பார்த்தலைத் தவிர்வாயாக எ-று.
விளக்கம்: பரிசின்மாக்கள் பலரும் வருவர் என்றவிடத்துப் பலரும் என்றதனால், அவருள் வல்லவரும் மாட்டாதவரு மெனப் பலரும் இருப்பது பெறப்படும். பரிசிலர் என்ற முறையில் மாட்டாதவரோடொப்ப வல்லவரையும் வைத்து நோக்குதல் மடவோர் செயலாதலால், அறிவுடையோர் வரிசையறிந் தீதல்வேண்டும் என்றதற்கு ஈதல் எளிது; வரிசை யறிதல் அரிது என்றார். புலமிக்க வரைப் புலமை யறிதல், புலமிக்க வர்க்கே இயலுவ தொன்றாதலின், |