| பெருஞ்சாத்தனார் வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் குடியேறிய பழங்குடி மக்களுள் ஒருவர். அக்குடியினரை வடமர் என்பது வழக்கு. இது இப்போழ்தும் பார்ப்பனரிடையே வழங்குகிறது. பொன்னின் நோட்டம் பார்ப்பது இவரது தொழிலாதல் பற்றி, இவர் வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் எனப்படுவாராயினர். வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் என்பார் ஒருவர் உளர். அவர் பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனைப் பாடியுள்ளார். அவர் வேறு; இவர் வேறு. இவர் பாட்டிலும், வில்லெறி பஞ்சி போல மல்குதிரை, வளிபொரு வயங்குபிசிர் பொங்கும் (நற். 299) என அவர் கூறுவது போல, நிணந் தயங்கு கொழுங் குறைக்குப் பருத்திப் பெண்டின் பனுவல் கூறப்படுவது முதலிய இயைபு கண்டு இவரையும் பேரிசாத்தனாராகக் கொள்வாரு முளர்.
இப் பெருஞ்சாத்தனார் தேர்வண்மலையன் சோழற்குத் துப்பாகி வென்றியொடு வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுடன், வேந்தே, நீ துணைசெய்த இப் போரின்கண் வென்றியெய்திய சோழனும் யான் வென்றிபெற உதவியவன் இவனேயென நின்னைப் பாராட்டிக் கூறுவன்; தோல்வி யெய்திய சேரமானும், வல்வேல் மலையன் துணைபுரியாதிருப்பனேல், இப்போரை வெல்லுதல் நமக்கு எளிதாயிருக்கும் என வியந்து கூறுவன். இருதிறத்தாரும் பாராட்டும் ஒருவனாய் விளங்குகின்றனை. நின் செல்வ மிகுதியைக் காணப்போந்த யாமும் ஊனும் கள்ளும் மாறி மாறி யுண்பேமாயினேம்; முயன்று ஈட்டிய பொருள் கொண்டு நீ உண்ணும் உணவு அமிழ்தாய் நீண்ட வாழ்நாளை நினக்கு நல்குவதாக எனப் பாராட்டியுள்ளார்.
| பருத்திப் பெண்டின் பனுவ லன்ன நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே | 5 | நள்ளாதார் மிடல்சாய்ந்த | | வல்லாளநின் மகிழிருக்கையே உழுத நோன்பக டழிதின் றாங்கு நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே குன்றத் தன்ன களிறு பெயரக் | 10 | கடந்தட்டு வென்றோனு நிற்கூ றும்மே | | வெலீஇயோ னிவனெனக் கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு விரைந்துவந்து சமந்தாங்கிய வல்வேன் மலைய னல்ல னாயின் | 15 | நல்லமர் கடந்த லெளிதும னமக்கெனத் | | தோற்றோன் றானு நிற்கூ றும்மே தொலை இயோ னிவனென |
|