செவ்வி நோக்குதலும், கூறத் தகுவன இவையென முன்னரே தம்முள் ஆராய்ந்து கோடலும் வேண்டா; அவனைப் பாடிச் சென்றோர் வறிது பெயர்வதில்லை யென்று இப் பாட்டில் வற்புறுத்தியுள்ளார்.
| நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது பெயர்குவ ரல்லர் நெறிகொளப் பாடான் றிரங்கு மருவிப் | 5 | பீடுகெழு மலையற் பாடி யோரே. (124) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை : நாள் அன்று போகி - நல்ல நாளன்றாகப் போகி; புள் இடை தட்ப - புள் நிமித்தம் இடையே நின்று தடுப்ப; பதன் அன்று புக்கு - செவ்வியன்றாகச் சென்று கூடி; திறன் அன்று மொழியினும் - கூறுபாடன்றாக முனியும் வார்த்தைகளைச் சொல்லினும்; வறிது பெயர்குவர் அல்லர் - வறிதாக மீள்வா ரல்லர்; நெறி கொள் - ஒழுங்குபட; பாடு ஆன்று இரங்கும் அருவி - ஓசை நிறைந்து ஒலிக்கும் அருவியையுடைய; பீடு கெழு மலையன் பாடியோர் - பெருமை பொருந்திய மலையையுடையோனைப் பாடியவர்கள் எ-று.
மலையற்பாடியோர் வறிது பெயர்குவ ரல்லரெனக் கூட்டுக. அன்றி யென்பது அன்றெனத் திரிந்தது செய்யுளாகலின்.வறி தென்னும் குறிப்பு வினையெச்சம், பெயர்குவ ரல்லரென்பதனுட் பெயர்தலோடு முடிந்தது. வறியரென் றுரைப்பாரு முளர்.
விளக்கம்: இன்றி யென்பது போல அன்றி யென்பதும் அன்று எனச் செய்யுளில் உகரவீறாக வரும் என்பவாகலின், ஈண்டு அன்றி யென்பது அன்று என வந்தது. இஃது ஆசிரியர் தொல்காப்பியனாரால் எடுத்தோதப்படாது உரையிற் கொள்ளவைக்கப்பட்டமையின், உரைகாரர் அன்றி....செய்யுளாகலின் என்றார். பதம் - சென்று காண்டற்குரிய காலம். திறன், கூறத் தகுவனவும் தகாதனவும் ஆகிய கூறுபாடுகள். வாய்தவறிக் கூறத்தகாதன கூறினும் அவற்றைக் கொள்ளாது வேண்டுவன நல்குவன் என்பார், திறனன்று மொழியினும் என்றார். 125. மலையமான்திருமுடிக்காரி ஒருகால், சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போருடற்றுவாராயினர். அப்போது சோழன் தன்னுடைய அமைச்சரை விடுத்து மலையமானைத் தனக்குத் துணைவலியாமாறு வேண்டினன். மலையமான் திருமுடிக்காரியும் அவற்குத் துணையாய் நின்று வென்றி பெறுவித்து, பின்னர், அவன் தன் திருக்கோவலூரை யடைந்து இனிதிருந்தான். வழக்கம்போல் அவனைக் காண்டற்குச் சான்றோர் பலர் வந்தனர். வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனாரும் அவரிடையே வந்திருந்தார். |