| கரவின்று வானம் மீன் பல பூப்பின் - மேகம் மறைத்தலின்றி வானம் பல மீனையும் பூக்குமாயின்; ஆனாது- அமையாது; ஒருவழிக் கருவழியின்றி - ஓரிடத்தும் கரிய இடம் இல்லையாக; பெரு வெள்ளென்னின் - பெருக வெண்மையைச் செய்யுமாயின்; பிழையாது மன் - அம்மீன்றொகை அதனுக்குத் தப்பாது எ-று.
யானையிற் பிழையாதென இயையும். மன் : அசை.
விளக்கம் : தேனை மூங்கிற் குழாய்களிற் பெய்துவைத்துக் களிப்பு மிகுவித்தல் பண்டையோர் மரபாதலின், வாங்கமைப் பழுனிய தேறல் என்றார்; பிறரும் நீடமை விளைந்த தேக்கட் டேறல் (முருகு. 195) என்பது காண்க. மாமலைக் கிழவன் என்றது, ஆய் அண்டிரன் பொதிய மலைக் குரியனாதல்பற்றி. வானத்தில் வெற்றிடம் சிறிதுமின்றி எங்கும் விண்மீன்களே பூக்கின் அவற்றின் தொகை, ஆய், இரவலர்க் கீத்த யானைத் தொகைக்கு நிகராகும் என்பார், யானையிற் பிழையாது என்றார். மீன் பூக்காத இடத்து வானம் கரிதாய்த் தோன்றுதலின், அதனைக் கருவழி யென்றார். வானமெங்கும் விண்மீன்களே நிறையப் பூத்தவழி எங்கும் அவற்றின் வெள்ளொளி பரந்து வெளிதாய்த் தோன்றுமாதலின், பெருவெள் ளென்னின் என்றார். பிழைத்தல் - நிகராகாமை. பெருவெள் ளென்னின் என்றதனால், பெருவெள் ளென்னுமாறு விண் மீன்களும் தோன்றா; ஆகவே, அவற்றின் தொகையும் யானைக்கு நிகராகா என்பதாம்.
130. வேள் ஆய் அண்டிரன்
ஆய் அண்டிரன் திருமனைக்கண் ஏணிச்சேரி முடமோசியார் தங்கியிருந்த காலையில், அவன்பால் வந்த பரிசிலர் பலர்க்கும் அவன் களிறுகளை மிகுதியும் வழங்குவது கண்டு பெருவியப்புக் கொண்டார். அதனால் அவர் அவனை நோக்கி, ஆயே! நின்னையும் நின் மலையையும் பாடிவரும் பரிசிலர் பலர்க்கும் மிக்க யானைகளை வழங்குகின்றாய்; அவற்றின் தொகைகளை நோக்கின், நீ முன்பு கொங்கரொடு பொருத காலத்தில் அவர்கள் நினக்குத் தோற்றுக் கீழே எறிந்துவிட்டு உயிர் தப்பி மேலைக் கடற்கரைப் பகுதிக்கு ஓடிய காலத்தில் அவர் எறிந்து சென்ற வேல்களினும் பலவாக வுள்ளன. யானைகள் இத்துணை மிகுதியாக இருத்தற்குக் காரணம் நோக்கினேன்; ஒன்றும் புலனாகவில்லை. ஒருகால் நின் நாட்டு இளம்பிடி ஒரு சூலுக்குப் பத்துக் கன்று ஈனுமோ? என்று இப்பாட்டிற் றம்வியப்புத் தோன்றக் குறித்துள்ளார்.
| விளங்குமணிக் கொடும்பூ ணாஅய் நின்னாட் டிளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ நின்னுநின் மலையும் பாடி வருநர்க் கின்முகங் கரவா துவந்துநீ யளித்த | 5 | அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க் | | குடகட லோட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே. (130) |
|