பக்கம் எண் :

275

 

அதனைத் தட்டுவது தோன்ற, “கனி செத்து அடிப்பின்” என்றார். “தூவற்
கலித்த புதுமுகை யூன்செத்து, அறியா தெடுத்த புன்புறச் சேவல்”
(மலைபடு. 146-7) என வருதல் காண்க. ஆய் அண்டிரனது ஆய்குடி
பொதியின் மலையிடத்ததாகலின், “ஆஅய் மழைதவழ் பொதியில்” என்றார்.
ஆடுமகள் குறுகினல்லது மன்னர் குறுகுதல்அரிது என்றாற் போலப்
பாரியது பறம்பைப் பற்றிக் கூறப்போந்த கபிலர், பாரியின் பேரிருங் குன்று,
“வேந்தர்க்கோ அரிதே, நீலத் திணைமலர் புரையு  முண்கண், கிணைமகட்
கெளிதால் பாடினள் வரினே” (புறம். 111) என்பது ஈண்டு ஒப்பு
நோக்கற்பாலது.

                   129. வேள் ஆய் அண்டிரன்

     ஆய் அண்டிரன் தன்பால் வரும் பரிசிலர் யாவர்க்கும் மிக்க
யானைகளை வழங்குவது கண்டு சான்றோர் வியப்புற்றாராக, ஏணிச்சேரி
முடமோசியார் அவர்கள் தெளிவெய்துமாறு மாசு மறுவின்றி விளங்கும்
வானத்தின்கண் எங்கும் சிற்றிடமுமின்றி விண் மீன்கள் பூத்து விளங்கினும்
அவற்றின் தொகை, ஆய் அண்டிரன்பாலுள்ள களிறுகளின் தொகைக்கு
நிகராகாது என்று இப்பாட்டாற் கூறியுள்ளார்.

 குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கமைப் பழுனிய தேறன் மகிழ்ந்து
வேங்கை முன்றிற் குரவை யயரும்
தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்
5ஆஅ யண்டிர னடுபோ ரண்ணல்
 இரவலர்க் கீத்த யானையிற் சுரவின்று
வான மீன்பல பூப்பி னானா
தொருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் ளென்னிற் பிழையாது மன்னே.
 (129)

     திணை : அது. துறை : இயன்மொழி. அவனை அவர் பாடியது.

     உரை : குறி யிறைக் குரம்பை - குறிய இறப்பையுடைய சிறிய
மனையின்கண்; குறவர் மாக்கள் - குறமக்கள்; வாங்கு அமைப்பழுனிய
தேறல் மகிழ்ந்து - வளைந்த மூங்கிற் குழாயின் கண் வார்த்திருந்து
முதிர்ந்த மதுவை நுகர்ந்து; வேங்கை முன்றில் குரவை அயரும் -
வேங்கை மரத்தையுடைய முற்றத்தின் கண் குரவைக் கூத்தை யாடும்;
தீஞ் சுளைப் பலவின் மாமலைக் கிழவன் - இனிய சுளையை
யுடைத்தாகிய பலாமரத்தையுடைய பெரிய மலையை யுடையோன்;
ஆஅய் அண்டிரன் - ஆயாகிய அண்டிரன்; அடு போர்
அண்ணல் - கொல்லும் போரைச் செய்யும் தலைவன்; இரவலர்க்கு
ஈத்த யானையின் - அவன் இரப்போர்க்குக் கொடுக்கப்பட்ட
யானைத் தொகைபோல;