பக்கம் எண் :

274

 

                 128. வேள் ஆய் அண்டிரன்

     வேள் ஆய் அண்டிரன் பெருஞ்செல்வ முடையவனாதலின்,
அக்கால நிலைக்கேற்ப ஏனைச் செல்வமுடைய வேந்தர் அவன் புகழ்
கேட்கப் பொறாது அவனோடு போருடற்றுவர். அவ்வாறு வேற்று வேந்தரது
படையெடுப்பின்றி ஆய் இனிதிருந்து புகழ் வளர்ப்பது பற்றிச்
சான்றோரிடையே பேச்சு நிகழ்ந்ததாக, ஆங்கே இருந்த ஏணிச்சேரி
முடமோசியார், “போருடற்றற் கேதுவாகிய அழுக்காறு கொண்ட வேந்தர்
உளராயினும், ஆயது பேராண்மையைக் கஞ்சி அமைந்திருந்தனரே யன்றி
வேறில்லை; வேள் ஆய் அண்டிரன் இருக்கும் ஆய் குடி பொதியின்மலை
யடியிலுள்ள தென்பது அவர் அறியாத தன்று; அவ்வூர்புகல் பாணர்
முதலிய பரிசிலர்க்கு எளிதே யன்றிப் போர் குறித்து வரும் வேந்தர்க்கு
அரிது” என்ற கருத்தமைந்த இப்பாட்டின் வாயிலாக அவரது ஐயத்தை
யகற்றினார்.

 மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் றெண்கண் கனிசெத் தடிப்பின்
அன்னச் சேவன் மாறெழுந் தாலும்
5கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
 ஆடுமகள் குறுதி னல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ வரிதே.     (128)

     திணை : அது. துறை : வாழ்த்து. இயன்மொழியுமாம். அவனை
அவர் பாடியது.

      உரை : மன்றப் பலவின் மாச்சினை மந்தி - ஊர்ப்
பொதுவின்கண் பலவினது பெரிய கோட்டின்கண் வாழும் மந்தி;
இரவலர் நாற்றிய - பரிசிலர் தூக்கி வைக்கப்பட்ட; விசி கூடு
முழவின் படின் தெண் கண் - பிணிப்புப் பொருந்திய மத்தளத்தினது
ஓசை இனிய தெளிந்த கண்ணை; கனி செத்து அடிப்பின் - பலாப்பழ
மென்று கருதித் தட்டினவிடத்து; அன்னச் சேவல் - அதன்கண்
வாழும் அன்னச் சேவல்; மாறு எழுந்து ஆலும் - அவ்வோசைக்கு
மாறாக எழுந்து ஒலிக்கும்; கழல் தொடி ஆஅய் - கழலவிடப்பட்ட
வீரவளையையுடைய ஆயது; மழை தவழ் பொதியில் - முகில்படியும்
பொதியின் மலை; ஆடு மகள் குறுகின் அல்லது - ஆடச் செல்லும்
மகள் அணுகி னல்லது; பீடு கெழு மன்னர் குறுகலோ அரிது -
பெருமை பொருந்திய அரசர் அணுகுதல் அரிது எ-று.

      இது கொடைச் சிறப்பும் வென்றியும் கூறியவாறாயிற்று.

      விளக்கம்:விசி, விசித்தல்; கட்டுதல் என்னும் பொருளதாம்.
“விசிப்பலகை” என்ற வழக்குண்மையுங் காண்க. பலாப் பழத்தையே
கண்டு பயின்ற மந்தி, முழவினையும் பலாக்கனி யென்று கருதி,