| | சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி உரைசா லோங்குபுக ழொரீஇய | 10 | முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே. (127) |
திணை : அது. துறை : கடைநிலை. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
உரை : களங் கனியன்ன கருங் கோட்டுச் சீறியாழ் - களாப்பழம் போலும் கரிய கோட்டை யுடைத்தாகிய சிறிய யாழைக் கொண்டு; பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென - பாடும் இனிய பாட்டை வல்ல பாணர் பரிசில் பெற்றுக்கொண்டு போனார்களாக; களிறு இலவாகிய புல்லரை நெடுவெளில் - களிறுகள் இல்லையாகிய புல்லிய பக்கத்தையுடைய நெடிய தறியின் கண்ணே; கான மஞ்ஞை கணனொடு சேப்ப - காட்டு மயில்கள் தத்தம் இனத்தோடு தங்க; ஈகை அரிய இழையணி மகளிரொடு - பிறிதோர் அணிகலமு மின்றிக் கொடுத்தற்கரிய மங்கலிய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே; ஆஅய்கோயில் சாயின்று என்ப - ஆயுடைய கோயிலைப் பொலிவழிந்து சாய்ந்ததென்று சொல்லுப; சுவைக்கு இனிதாகிய குய்யுடை அடிசில் - நுகர்தற் கினிதாகிய தாளிப்பையுடைய அடிசிலை; பிறர்க்கு ஈவு இன்றி- பிறர்க்கு உதவலின்றி; தம் வயிறு அருத்தி - தம்முடைய வயிற்றையே நிறைத்து; உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய - சொல்லுதற்கமைந்த மேம்பட்ட புகழை நீங்கிய; முரைசு கெழு செல்வர் நகர் - முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயில்; போலாது - இதனை ஒவ்வாது எ-று.
என்றதன் கருத்து, செல்வர் நகர் பெருந் திரு வுடைமையின் சிறந்ததுபோன் றிருப்பினும், ஆய் கோயில் வறிதெனினும், இஃது அதனினும் சிறந்த தென்பதாம். ஆஅய் கோயில் சாயின் றென்ப; ஆயினும் முரசு கெழு செல்வர் நகர் இதனை யொவ்வாதெனக் கூட்டுக.
விளக்கம் : வெளில் - யானை கட்டுந்தறி. யானை கட்டுந் தறிகளில் யானையில் வழி அவை பொலிவழிந்து தோன்றுமாதலின், புல்லரை நெடுவெளில் என்றார். மகளிர்க்கு மங்கலவணி யொழியப் பிறவெல்லாம் நீக்குதற்கும் உரியவாமாதலின், ஈகை யரிய இழை யென்றார். உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன், றீவார்மேல் நிற்கும் புகழ் (குறள்.242) என்பவாகலின், பிறர்க்கீதலின்றித் தம் வயிறு நிறைக்கும் வேந்தரை உரைசால் ஓங்குபுக ழொரீஇய செல்வர் என்றார். |