| தெலுங்கர்க்குரிய ஆந்திர ரென்னும் சொல் பிற்காலத்திற் காணப்பட்ட தாதலின், அண்டிர னென்பது ஆந்திர னென்பதன் திரிபென்றல் பொருந்தாது. அகத்தியனாற்கொண்டு வரப்பட்ட குடியினனாயின், இவனைப் பாடிய சான்றோர் அதனைக் குறிக்காமையின், அக் கூற்றும் ஏற்கற்பாலதன்று. இவனுடைய கைவண்மையும் போராண்மையும் சான்றோர்களாற் பெரிதும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன. இவனுக்கும் கொங்கருக்கும் ஒருகால் போருண்டாயிற்று. அப்போழ்து இவன் கொங்கரை வென்று அவர் குட கடற்கரையிடத்தே யோடி யொளிக்குமாறு பண்ணினன். தமிழகத்தின் தெற்கின் கண்ணதாகிய பொதிய மலையும் ஆய் குடியும், அம் மலைக் குழுவிலுள்ள கவிர மலையும் புலவர் பாடும் புகழ் படைத்தவை யாகும். இவனை, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், பரணர், காரிக் கண்ணனார் முதலிய சான்றோர் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர். இவருள் இவனைப் பல படியாலும் பாராட்டிப் பாடியுள்ளவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவர்; திருந்துமொழி மோசி பாடிய ஆயும் (புறம். 158) எனப் பெருஞ்சித்திரனார் கூறுவது காண்க; இவன் பரிசிலர்க்கு மிக்க பரிசில் வழங்க அவர்கள் அதனைப் பெற்றுச் செய்யும் ஆரவாரத்தை விதந்தோதும் கருங்கோட்டுப் புன்னை யென்று தொடங்கும் நற்றிணைப் பாட்டை (167)ப் பாடிய ஆசிரியர் பெயர் தெரிந்திலது. இவருட் பரங்கொற்றனார், அரண்பல நூறி, நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன், சுடர் மணிப் பெரும்பூண் ஆஅய் (அகம். 69) என்றும், பரணர், இவன் நாட்டுக் கவிரத்தைச் சிறப்பித்து, தெனாஅது, ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற், கவிரம் பெயரிய உருகெழு கவான் (அகம். 168) என்றும், காரிக்கண்ணனார், வியப்படை இரவலர் வரூஉம் அளவை அண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை (நற். 237) என்றும் பாடியுள்ளனர். ஏனையோர் பாட்டுக்கள் இந்நூற்கண் வந்துள்ளன.
ஆசிரியர் ஏணிச்சேரி முடமோசியார், ஏணிச்சேரி யென்னும் ஊரினர். இஃது உறையூரின் பகுதியாகும். மோசி யென்பது இவரது இயற்பெயர். மோசி குடி யென்னும் ஓர் ஊரும் உண்டு. அவ்வூர் மதுரைமாநாட்டுக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. தொல்காப்பிய வுரைகாரர் இவரை அந்தணராகக் கொள்வர். இவர் இப் பாட்டின்கண், பிறர்க் கீயாது தாமே தமித்துண்டு தம் வயிறு நிரப்பும் ஏனைச் செல்வர் மனைகளிற் காணப்படும் ஆரவாரமும் பொலிவும், தன்பாலுள்ள களிறனைத்தையும் இரவலர்க்கு நல்கி இழையணிந்த மகளிரொடு புல்லிதாய்த் தோன்றும் ஆய் அண்டிரனது திருமனைக்கண் காணப்படா என ஆயினது கொடை நலத்தைச் சிறப்பித்துள்ளார்.
| களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப | 5 | ஈகை யரிய விழையணி மகளிரொடு | | சாயின் றென்ப வாஅய் கோயில் |
|