பக்கம் எண் :

271

 

பெண்ணையம் படப்பை நாடு கிழவோய் - பெண்ணையாற்றுப்
பக்கத்தை யுடைய நாட்டை யுடையோய் எ-று.

     உரவோன் மருக, பொருந, நாடு கிழவோய்; நின்வயிற்
கிளக்குவமாயின் அந்தணாளன் கிளையொடும் பொலிய இசை நிற்பப்
பாடினன்; அதற்கொண்டு பிறர் கலம் செல்லாத அனையேமாயும் இன்மை
துரத்தலால் இசைதர வந்து நின் வண்மையிற் சில தொடுத்தேம் யாம் எனக்
கூட்டி வினை முடிவு செய்க.

     மக்கட் கெல்லா மென்பது ஐந்தாவதன் மயக்கம். மக்கட்கெல்லாம்
ஒக்க வெனினு மமையும் வண்மையிற் றொடுத்தனம் என்பதற்கு நின்
வண்மையால் வளைப்புண்டன மெனினு மமையும்.

     விளக்கம் : பகைவருடைய யானைகளைக் கொன்று அவற்றின்
ஓடைப் பொன்னைக் கொண்டு தாமரைப் பூக்கள் செய்து பாணர்க்கு
வழங்குவது பண்டையோர் மரபு. இதனை இவனுடைய முன்னோரும்
செய்தனரென்றதற்கு, “வாடாத் தாமரை சூட்டிய உரவோன் மருக” என்றார்.
கடல் மீதும் பொதுநீக்கி நிலவும் தமது அரசாணை (Maritime Supremacy)
செலுத்திப் பண்டைத் தமிழ் வேந்தர் ஆட்சி புரிந்த திறம் தோன்ற,
“சினமிகு.......செல்கலாது” என்றார். இஃது ஆங்கிலேயர் நாட்டு வரலாற்றினும்
காணப்படும் அரசியற் பண்பென அறிக. வல்லே யென்பது விரைந்தென்னும்
பொருளதாயினும் வல்லவாறே என்று பொருள் கூறிக்கொள்ளினும்
பொருந்தும். மக்கட்கெல்லாம் என்பது மக்களெல்லாரினும் என ஐந்தாவதன்
பொருள்படுதலின், உரைகாரர் “ஐந்தாவதன் மயக்கம்” என்றார்.
மலையனையும் அவன் மலையையும் கபிலர் பாடிய செய்தியை மாறோக்கத்து
நப்பசலையார், பிறாண்டும் “பொய்யா நாவின் கபிலன் பாடிய, மையணி
நெடுவரை” (புறம். 174) என்று கூறியுள்ளார். மலையனுக்குரிய முள்ளூரில்
முன்னொருகால் சோழ வேந்தனொருவன் புகலடைந்திருந்தா னென்பதையும்
நப்பசலையாரே குறித்துள்ளார். ததைதல்-சிதறுதல். தாங்குதல்-தடுத்தல்.
“வருதார் தாங்கி” (புறம்.52) என்றாற்போல. வண்மையில் தொடுத்தனம்
என்றற்கு வண்மையிற் சிலவற்றைத் தொடுத்துக் கூறினேம் என்று உரை
கூறினவர், வேறு பொருளும் கூற அமைதலின், “நின் வண்மையால்
வளைப்புண்டனம்” என்று பொருள் உரைக்கினும் அமையும் என்றார்.

                     127. வேள் ஆய்

     வேளிர் குலத்துப் பாரிபோல ஆயும் வேளிர் குலத்தவன். இவன்
பொதியின் மலையடியிலுள்ள ஆய் குடியைத் தலைநகராகக் கொண்டு
அரசு முறை புரிந்தொழுகிய குறுநில மன்னன். இவன் ஆய்
அண்டிரனென்றும் சான்றோராற் பாராட்டப்படுகின்றான். அண்டிரன்
என்னும் சொற்குப் பொருள் விளங்கவில்லை. நற்றிணை யுரைகாரரான
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் “அண்டிரனென்பது ஆந்திரனென்னும்
தெலுங்கச் சொல்லின் திரிபாதலின் இவன் தெலுங்க நாட்டின னெனவும்,
அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிரைக் கொணர்ந்தா
ரென்றிருத்தலானே இவன் அவராற் கொண்டுவரப்பட்ட வேளிர் மரபின
னெனவுங் கூறுவ” ரென்பர்.