| மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே. (131) |
திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.
உரை : மழைக் கணம் சேக்கும் மாமலைக் கிழவன் - முகிலினம்சென்று தங்கும் உயர்ந்த மலைக்குத் தலைவன்;வழைப்பூங் கண்ணி - சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினையும்; வாய் வாள் அண்டிரன் - வாய்ந்த வாளினையுமுடைய அண்டிரனது; குன்றம் பாடினகொல் - மலையைப் பாடினவோ; இக் கவின் பெறு காடு - இந்தக் கவினையுடைய காடு; களிறு மிக உடைய - களிறுகளை மிகவுமுடைய எ-று.
யானைக்குப் பிறப்பிடமாயிருக்கிற காட்டிலும் அண்டிரனைப் பாடினோர் யானை மிகவு முடையரென்று அவன் கொடைச் சிறப்புக் கூறியவாறு. ஆய்க்கு அண்டிர னென்பதும் ஒரு பெயர்.
விளக்கம் : மாமலைக் கிழவனாகிய அண்டிரனுடைய குன்றம் பாடின கொல்லோ, இக் கவின்பெறு காடு களிறு மிக வுடையவாகலான் என இயையும். தன்னையும் தன் மலையையும் பாடி வருவோர்க்கு எண்ணில்லாத யானைகளை ஆய் அண்டிரன் கொடுப்பதை நேரிற் கண்டு மகிழ்ந்துள்ளாராகலின், இக் கவின்பெறு காடு களிறுமிக வுடையவாகலான், குன்றம் பாடின கொல்லோ என்றார். ஆய் அண்டிரனைப் பாடிய பரிசிலர் அவன் நல்கும் உணவாலும் அணிகலங்களாலும் கவின்பெறுவதோடு களிறுகளையும் மிகப் பெற்றுச் செல்வதுப்பற்றி, இக் கவின் பெறுகாடு என்று சிறப்பித்தார். பசுந் தழை போர்த்துப் பூவும் காயும் கனியும் தாங்கிநிற்பது விளங்க, கவின்பெறு காடு எனச் சிறப்பிக்கப் பட்டது. மழைக்கணம் - முகிற்கூட்டம். சேக்கும் - தங்கும். வழை - சுரபுன்னை.
132. வேள் ஆய் அண்டிரன்
ஆய் அண்டிரனுடைய பெருங்கொடையும் பேரன்பும் பெற்ற ஏணிச்சேரி முடமோசியார், அவன்பால் சின்னாள் தங்கி அவன் நற்பண்புகளையும் அவனது நட்புப் பயில்தோறும் நூல் நயம்போல் இன்பந்தருவதையும் உணர்ந்து, இத்தகைய பெருந்தகையின் பேரன்பினை முன்பே பெறா தொழிந்த தமது நிலைமைக் கிரங்கி, இவ்வுலகில் எத்துணையுயர்ந்தோர்க்கும் முன்னே வைத்து நினைத்தற்குரிய பெருந்தகையை முன்னே நினையாது ஏனைச் செல்வரை நினைந்து, பின்பே இவனை நினைந்தேன்; அவரது பொருள் சேராத புகழைப் பாடினேன்; அவரது பொய்ப்புகழைப் பிறர் பாடக் கேட்டேன்; இவற்றை முறையே செய்த என் நெஞ்சும், நாவும், செவியும் அழிக எனத் தம்மை நொந்து கொண்டு, வடதிசைக்கண் இமயம் நிற்பதுபோல, இத் தென்றிசைக் கண் இவ் வாய்குடி நில்லாதாயின் இவ்வுலகம் கீழ்மேலதாகி அழிந்து படும் என்று இப் பாட்டிற் குறித்துள்ளார். |