| கசிவுற்ற என் பல் கிளையொடு - வியர்ப்புற்ற எனது பல சுற்றத்தோடு; பசி அலைக்கும் பகை ஒன்றென்கோ - பசிநோய் வருத்தும் பகையை ஒரு பகை யென்பேனோ; அன்ன தன்மையும் அறிந்தீயார் - அப்பெற்றிப்பட்ட எனதியல்பையும் அறியாராய்; நின்னது தா என - நின் கைப்பொருளைத் தாவென்று சொல்லி; நிலை தளர - எம்முடைய நிலைகள் தளரும்படி; மரம் பிறங்கிய நளிச் சிலம்பின் - மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில்; குரங்கன்ன புன் குறுங் கூளியர் - குரங்கு போலப் பறித்துக்கொள்ளும் இயல்பையுடைய புல்லிய குறிய ஆறலை கள்வர்; பரந் தலைக்கும் பகை ஒன்றென்கோ - பரந்து வந்தலைக்கும் பகையை ஒரு பகையென்பேனோ; எனைப் பகையும் அறியுநன் ஆய் எனக் கருதி- எல்லாப் பகையும் அறிவான் ஆயே எனக் கருதி; வாயாரப் பெயரேத்தி - எமது வாக்கினால் மிகவும் நினது பெயரை வாழ்த்தி; நின் இசை நம்பி - நின்னுடைய புகழை நச்சி; சுடர் சுட்டசுரத்து ஏறி - ஞாயிறு சுடப்பட்ட கரத்தின் கண்ணே யேறி; இவண் வந்த பெருநசையேம் - இவ்விடத்து வந்த பெரிய நச்சுதலை யுடையேம்; எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் - இங்ஙனம் வறுமையுற்ற எங்களுக்கு ஒன்றை இடுவோ ரன்றோ பயன் கருதாது பிறர்க்கு இடுபவர்களாவாரெனவும், பிறர்க் கீவோர் தமக்கு ஈப வென - எம்மை யொழிந்த பிறர்க்கிடுவாரன்றோ பயன் கருதி யிடுதலால் தங்களுக்கே இடுவோ ரெனவும்; அனைத்து யான் உரைத்தனன் ஆக - அவ்வளவாக யான் சொன்னேனாக; நினக் கொத்தது நீ நாடி - நினக்குப் பொருந்தியது நீ ஆராய்ந்து; பரிசில் நல்கினை விடுமதி - எமக்குப் பரிசில் தந்தனையாய் விடுவாயாக; அல்கலும் - நாடோறும்; தண் புனல் வாயில் துறையூர் முன்றுறை - குளிர்ந்த நீரோடும் வாய்த்தலைகளையுடைய துறையூரின்கண் துறை முன்னர்; நுண் பல மணலினும் ஏத்தி - நுண்ணிய பல மணலினும் பல நாள் வாழ்க வெனவாழ்த்தி; உண்குவம் - உண்பேம்; பெரும-; நீ நல்கிய வளன் - நீ தந்த செல்வத்தை எ-று.
பெரும, நீ நல்கிய வளத்தை அல்கலும் ஏத்தி உண்பேம்; நினக் கொத்தது நீ நாடிப் பரிசில் நல்கினை விடுமதி யெனக் கூட்டுக.
ஆ யென வென்பதற்கு ஆ யென்று சொல்லவென்றும், எமக்கீவோர் பிறர்க் கீவோர் என்பதற்கு, எமக் கீவோர் எம் வறுமை கண்டு வருத்தமுறுவோர் யாவர்க்கும் ஈவோ ரெனவும், பிறர்க் கீவோர் தமக்கீப வென்பதற்குப் பிறர்க்குக் கொடுப்போர் அக் கொடுக்கப்படுகின்றோர் தமக்கே கொடுப்போராவ ரெனவு முரைப்பாரு முளர். கசிவுற்ற வென்பதற்கு இரக்கமுற்ற வெனினு மமையும். பேஎற் பகையென வென்புழி எனவும், ஆங்கெனைப் பகையு மென்புழி ஆங்கும் அசைநிலை. கண் தெண்ணீரின் மல்கி யெனவும் வாயாரப் பெயரேத்தி யெனவும் மாற்றப்பட்டன. |