பக்கம் எண் :

288

 

     விளக்கம் : உண்ணாமையால் உடல் வாடுதலும் வியர்த்தலும்
இயல்பாதலின், “ஊன்வாடிக் கசிவுற்ற என் பல்கிளை” யென்றார். ஆறலைக்
கள்வர் மலைகளில் குரங்குபோல மறைந்திருந்து வழப்பறி செய்வது தோன்ற,
“குரங் கன்ன புன்குறுங் கூளியர் பரந்தலைக்கும் பகை” யென்றார். துறையூர்
தமதூராதலின், அதனையே விதந்தோதுகின்றார்.

                 137. நாஞ்சில் வள்ளுவன்

     திருக்குறட் செல்வத்தைச் செந்தமிழ்க்கு வழங்கி உலகு புகழும்
நிலைப்புகழ் பெற்ற திருவள்ளுவர் போல, வள்ளுவ னென இயற்பெயர்
பெற்ற கொடைவள்ளல் இந் நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் மலையும் அதன்
அடிப்பகுதியிலுள்ள நாஞ்சில் நாடும் இவ் வள்ளுவற்குரியவை. இவன்
சேரமன்னர்க்குக் கீழிருந்து வாழும் சிற்றரசன். இவன் முன்னோர் போரிற்
புறங்கொடாத புகழ் பெற்றவர். இவற்கு முடிவேந்தனான சேரன், இவன்பால்
பெருமதிப்பும் பேரன்புமுடையவனாய் இவன் வேண்டியன யாவும்
வேண்டியவாறே இவற்கு வழங்கினன். அதனால் இவனும் அவன்பொருட்டுச்
சாதல், தன்னை விற்றாயினும் கொள்ளத்தக்கதெனக் கருதும் வீறு
கொண்டிருந்தான். ஒளவையாரால் இவன் பெரியோர் வரிசையுள் வைத்துப்
போற்றப்பட்டவன். இவனது சான்றண்மையை வியந்த ஒரு சிறைப்
பெரியனார் இவனைப் பெற்ற தாய் தந்தையர் தவத்தைப் பாராட்டி, “நின்
தந்தை தாய் வாழியர் நிற்பயந் திசினோரே” யென்று வாழ்த்தியுள்ளார்.
“இவன் தந்தை யென்னோற்றான் கொல்லென்னும் சொல்” நிகழுமா
றொழுகிய இவனது ஒழுக்கம் திருவள்ளுவர் திருவுள்ளத்திருந்து விளக்கஞ்
செய்திருப்பது இதனால் நன்கு புலனாகிறது. இவனை ஒரு சிறைப்
பெரியனார், மருதனிளநாகனார், ஒளவையார் என்ற சான்றோர் மூவரும்
பாடியுள்ளனர். இவருள் ஒளவையார் இவனைச் சிறிது அரிசி வேண்டினாராக,
அவர்க்கு இவன் பெரியதொரு களிற்றினை நல்கினான். அதனை வியந்து
அவர் பாடிய பாட்டு மிக்க சுவையுடையதாகும். இப்போதுள்ள
நாகர்கோவிலைச் சூழ்வுள்ள நாடு நாஞ்சில் நாடு எனப்படுகிறது. ஆங்குள்ள
மலைகளுள் நாஞ்சில்மலை இன்னதெனத் தெரிந்திலது. ஆதலால்,
வள்ளுவனது நாஞ்சில்மலையும் அவனது நாடும் இவையெனத் தெளிதற்கு
வேண்டும் விளக்கமில்லாமல் இருக்கின்றன. உடுமலைப்பேட்டைக்குத்
தெற்கிலுள்ள மலைத் தொடர்களிற் றோன்றி யோடும் காட்டாறுகளுள் ஒன்று
நாஞ்சிலாறு என்னும் பெயர் கொண்டுளது. உ. வே. சாமிநாதையரவர்களும்
இது குறித்து ஒன்றும் கூறமாட்டா தொழிந்தனர். இவ் வள்ளுவன் சேர
மன்னன் ஆதரவு பெற்றவனென்பது கொண்டு, இவனது நாடு சேரநாட்
டெல்லையில் தமிழகத்தைச் சாரவிருந்த தென்பது ஒருதலை.

     இனி, இவனைப் பாடிய சான்றோருள் ஒரு சிறைப் பெரியனார் பெயர்
சில ஏடுகளில் ஒரு சிறைப் பெயரினார் என்றும் காணப்படுகிறது. இவர்
நாஞ்சில் வள்ளுவனது நாட்டிலே பிறந்து வளர்ந்து நல்லிசைப் புலமை
நிறைந்தவர். இவர்க்கு வள்ளுவன் ஆட்சி நலத்திற் பேரீடுபாடு உண்டு.
நாட்டில் உள்ள சான்றோர்க்குப் பெருந்திரு வுடையரான தமிழ்வேந்தர்
மூவரையும் பாடுதற்குப் பேரவா வுண்டாதல் இயல்பாயினும்,